பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகு சந்தரம் -இ தூது, கோவை, மடல், விலாசம் என்று பல கவிஞர்கள் மலைமலையாக எழுதிக் குவித்தனர். பலர் தல புராணம், பிள்ளைத்தமிழ், அந்தாதி என்று பக்திப் பிரபந்தங்களைப் பாடித் தள்ளினர். இப்பிரபந்தங்களில் தலைவன் மாறுவானே தவிர, கருத்துக்கள் மாறுவதில்லை. இந்தச் செக்குமாட்டுப் பிரபந்தங்களின் நிலைபற்றிப் பாரதிதாசன் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார். கலம்பகம் பார்த்தொரு கலம்ப கத்தையும் அந்தாதி பார்த்தொரு அந்தாதி தன்னையும் மாலை பார்த்தொரு மாலை தன்னையும் காவியம் பார்த்தொரு காவியந் தன்னையும் வரைந்து சாற்றுக் கவிதிரிந்து பெற்று விரைந்துதன் பேரை மேலே எழுதி இருநூறு சுவடி அருமையாய் அச்சிட்(டு) ஒருநூற்றாண்டில் ஒன்றிரண்டு பரப்பி வருவதே புலமை வழக்காறு.... இப்பிரபந்தங்களில் குறுநில மன்னர்களும், நிலப்பிரபுக்களுமே சமுதாயமாகச் சித்திரிக்கப்பட்டனர். அடித்தள மக்களைப் பற்றிப் பேச்சே இல்லை. உளுத்துப்போன இப்பணக்காரக் கோட்டையை முதலில் வெடி வைத்துத் தகர்த்தவன் பாரதி. இங்கிலாந்துநாட்டு இளவரசரையும், எட்டயபுரத்துப் பட்டத்தரசரையும் பாடிய வாயால், கரும்புத் தோட்டத்தில் கண்ணிர் வடித்த கூலிக்காரப் பெண்களையும் பாடினான். இலக்கியத்தில் படைக்கப்படும் தலைவர்கள் உயர்குடிப் பிறந்தவர்களாக இருக்க வேண்டும் என்பதைத் தொல்காப்பியம் போன்ற இலக்கண நூல்கள் வற்புறுத்துகின்றன. பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட குடியினரைச் சேர்ந்த ஏவலர்கள் தலைவர்களாகக் கவிதையில் இடம் பெறுவதில்லை. இந்த மரபைப் பாரதிதாசன் சுக்குநூறாக உடைத்தார்.