பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகு கந்தரம் -இ திருமணத்துக்கு முன்பாகவே, மிதிலையில் இராமனையும் சீதையையும் சந்திக்க வைத்துக் களவியலுக்கு வழிகோலியிருக்கிறான் கம்பன்' என்று கூறுவர். கம்பனுடைய தமிழ்ப் பண்பாட்டுப் பற்றைப் பாராட்டுகிறோம். இராமனுக்கும் சீதைக்கும் கம்பன் அமைத்த களவியல் காட்சி சரிதான். ஆனால் களவியல் காட்சியில் அவர்கள் பார்த்த பார்வைதான் சரியில்லை. சீதை தன் தோழியரோடு கன்னி மாடத்தின் உப்பரிகை மீது நின்று, அன்னம் தன் பேடையோடு ஆடும் அழகினைக் கண்டு களித்துக் கொண்டிருக்கிறாள். அப்போது இராமன் மிதிலை நகர் வீதியில் தன் தம்பியோடும், விசுவாமித்திர முனிவரோடும் வந்து கொண்டிருக்கிறான். அப்போது இருவர் விழிகளும் சந்திக்கின்றன. இச்சந்திப்பைக் கம்பன் கீழ்க்காணும் பாடலில் விளக்குகிறான். எண்ணரு நலத்தினாள் இனையள் நின்றுழி கண்ணொடு கண் இணை கவ்வி ஒன்றையொன்று உண்ணவும் நிலைபெறாது உணர்வும் ஒன்றிட அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள். முதல் சந்திப்பில் முன்பின் அறியாத ஒர் ஆடவனின் நோக்கு தன்மீது விழும்போது, இயல்பாக ஏற்படும் நாணம் கலந்த மெய்ப்பாடு சீதையிடம் தோன்றவில்லை. 'கண்ணொடு கண்கள் கவ்வின. உணர்வு ஒன்றி ஒன்றை யொன்று உண்ணவும் தொடங்கின என்பது இயற்கைக்கு மாறாகவும், தமிழ்க் களவியல் இலக்கணத்துக்கு மாறாகவும் அமைந்துள்ளது.