பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- பாவேந்தர் படைப்பில் அங்கதம்-(35) அடுத்த பாடலில் 'சீதையின் நோக்கு இராமனின் தோளிலும், இராமனின் நோக்கு தாக்கணங்கு அனையவள் தனத்திலும் தைத்தவே என்று கம்பன் பாடுவது, இராமன் போன்ற அவதார புருடன் பண்புக்கு ஏற்றதாகத் தெரியவில்லை. இனி, இதே சூழ்நிலையில் அமைந்த பாரதிதாசன் பாடல் ஒன்றைப் பார்ப்போம். "காதற் குற்றவாளிகள்’ என்பது பாட்டின் தலைப்பு. பாட்டுடைத் தலைவன் சுந்தரம் தலைவி சொர்ணம். வீட்டுப் பெரியவர்கள் வெளியில் சென்றிருக்கிறார்கள். அப்போது பக்கத்து வீட்டுச் சொர்ணம் உள்ளே வருகிறாள். எதிர்பாராத சந்திப்பு! பாடம் படிப்பதில் மூழ்கியிருந்தான் சுந்தரம். அவன் அழகைக் கண்களால் பருகியபடி சொர்ணம் ஒரு கணம் நின்றிருக்கிறாள். அப்போது சுந்தரம் நிமிர்ந்து பார்க்கிறான். அவர்கள் பார்வை மோதிக்கொள்கின்றன. இந்தக் காட்சியை விளக்க வந்த பாரதிதாசன். பாடம்படித்து நிமிர்ந்த விழி - தனிற் பட்டுத் தெரித்தது மானின் விழி ஆடை திருத்திநின் றாள் அவள்தான் - இவன் ஆயிரம் ஏடு திருப்புகிறான் என்று பாடுகிறார். ஒர் ஆடவன் பார்வையை முதன் முதலாக எதிர்கொள்ளும்போது, சொர்ணத்தின் பார்வை பட்டுத் தெரிக்கிறது. அவளை நாணம் சூழ்ந்து கொள்கிறது. இது போன்ற சூழ்நிலையில் ஒரு பெண்ணின் மெய்ப்பாடு எப்படியிருக்கும் என்பதைத் தொல்காப்பியர், 'அல்குல் தைவரல் அணிந்தவை திருத்தல்' என்று குறிப்பிடுகிறார். இது இயல்புதானே? எந்த இடத்தில் ஆடை எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருக்கிறதா என்பதைப் பார்த்துச் சரி செய்து கொள்வதுதானே பெண்மைக்கழகு!