பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன் அறுசுவை விருந்து.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
11

விருந்து என்றால் கவிஞருக்கு மட்டிலா மகிழ்ச்சிதான்.

கறி, மீன், முட்டை, இரால் முதலியவற்றை மிக விருப்பத்தோடு ருசித்துச் சாப்பிடுவார்.

மதுரையில் ஒரு அன்பர் இருந்தார்.அவரை கவிஞரின் 'பக்தர்’ என்றே கூறவேண்டும்; [அவர் பெயர் நினைவு இல்லை.] கவிஞர் வந்திருக்கிறார் என்று கேள்விப்பட்டால் உடனே தமது குதிரை வண்டியுடன் வந்து கவிஞரை அழைத்துக்கொண்டு தம் வீட்டுக்குப் போய் விடுவார். ஒரளவு வசதி படைத்தவர்.

ஒருமுறை கவிஞரையும் என்னையும் மன்னர் மன்னனையும் குதிரை வண்டியில் அழைத்துச் சென்றார்.

வகை வகையான உணவுப் பதார்த்தங்களே தயாரிக்கச் சொல்லி, கவிஞருக்குப் படைத்து, அவர் மகிழ்ந்தார். இதில் அவருக்கு உண்டாகும் ஆனந்தத்துக்கு அளவே இல்லை.

ஆனால், கவிஞருக்கு சில சமயங்களில் சிறிது சிரமம் ஏற்பட்டு விடும். ஏனெனில், அன்பர் வீட்டுக்குப் போய் விட்டால் குறைந்த பட்சம் மூன்று நாட்களுக்கு பிறகு தான் விடுவிப்பார்.

நேரம் தவறாமல், ’'காபி குடியுங்கள்; சாப்பிட வாருங்கள்; பலகாரம் சாப்பிடுங்கள்; சிறிது நேரம் தூங்குங்கள்; பால் குடியுங்கள்,'’- இப்படியாக உபசரித்துக் கொண்டே கவிஞரை திக்குமுக்காட வைத்து விடுவார். கவிஞரோ தர்மசங்கடத்தில் அகப்பட்டுக் கொள்வார். அன்பருடைய 'பக்தி சிரத்தை’, புராணங்களில் காணப்படும் 'சிவபக்த’ரைப் போல் இருக்கும்.