பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன் அறுசுவை விருந்து.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13

 இதற்கு மத்தியில் ஸ்ரீதரன் வந்தார். கவிஞர் அப்போது உட்கார்ந்திருந்தார். அந்த விஷயத்தின் நிலைமையையும், முயற்சி செய்திருப்பதையும் படிப்படியாகக் கூறி விவரித்தார் ஸ்ரீதரன்.

கவிஞரின் பொறுமை அணைகடந்த வெள்ளமாயிற்று. “அதென்னப்பா, நான் தம்பியிடம் சொல்லி, தம்பி உன்னிடம் சொல்லி, அதை நீ சுப்பிரமணியத்திடம் சொல்லி,யாரோ ஒரு மயிரானிடம் சொல்லி... இதெல்லாம் ஆகிற காரியமா?'’ என்று படபடத்தார்.

இப்பொழுதும் கூட, எதை முன்னிட்டேனும் யாரிடமாவது நான் முயற்சி செய்யவேண்டியிருந்தால், மேற்படி சம்பவம் உடனே என் நினைவுக்கு வந்து விடும்.


4
பணத்தை தொடமாட்டார்

கவிஞர் கணக்கு விவகாரங்களிலே தலையிடமாட்டார். ரூபாயை அவர் வாங்கிக் கொண்டாலும் சரி, எண்ணிப் பார்ப்பதில்லை. அவர் கொடுத்தாலும் சரி அவர் எண்ணுவதில்லை. மன்னர்மன்னனிடமோ அல்லது மனைவியாரிடமோ கூறி, எடுத்துக் கொடுக்கச் சொல்வார்.

பணம் இருப்பதும் தெரியாது; இல்லாததும் கவிஞருக்குத் தெரியாது. குடும்பத்தினரே அதைக் கவனித்துக் கொள்வார்கள்.

பத்து ரூபாயானாலும், நூறு ரூபாயானாலும், ஆயிரம் ரூபாயானாலும் சரி, அவர் கேட்கும் போது கிடைக்க வேண்டும். அப்படி ஒரு சுபாவம்.