பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன் அறுசுவை விருந்து.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15

 சில சமயம், வந்தவர் யார் என்பதே கவிஞருக்குத் தெரியாது. அடிக்கடி வருபவர்களைத் தெரிந்து கொள்வார். எப்பொழுதோ ஒரு முறை வருபவரை, எப்படி நினைவில் வைத்துக் கொள்வார்?

ஒரு சமயம் ஒருவர் வந்தார். வணக்கம் என்றார், கவிஞரும் பதிலுக்கு வணக்கம் தெரிவித்தார். ஆனால், அவர் யார் என்பது மட்டும் அவருக்குத் தெரியவில்லை

"எங்கே இருந்து வருகிறீர்கள்?'’ என்று கேட்டார் கவிஞர். ஊரைக்கொண்டு ஆளைத் தெரிந்து கொள்ளலாம் என்பது கவிஞரின் எண்ணம்.

"நேராக பஸ் ஸ்டாண்டிலிருந்து வருகிறேன்" என்ருர் வந்தவர்.

"இப்பொழுது, நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?' என்று கேட்டார் கவிஞர் மறுபடியும், அவர் செய்யும் தொழிலைக்கொண்டு அவரைத் தெரிந்து கொள்ளலாம் என்ற நினைப்பு.

அவரோ, "சும்மாதான் இருந்து கொண்டிருக்கிறேன்'’ என்றார்.

கவிஞரின் முயற்சி தோல்வியுறவே, ‘நீங்கள்......?" என்று கேட்கத் தொடங்கினார்.

தான் இன்னார் என்பதை வந்தவர் விவரித்தார்.

"அதுதானே பார்த்தேன்; எனக்குத் தெரியுமே" என்று கூறிவிட்டு, ஏதோ பேசத் தொடங்கினார்.

இப்படி எத்தனையோ முறை நிகழ்ந்தது உண்டு.