பக்கம்:பாவைப் பாட்டு.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்றாவது திருப்பாடல்

“முத்தன்ன வெண்ணகையாய் என்ற முத்திரையுடன் மூன்றாம் பாடல் தொடங்குகிறது. இரண்டாம் திருப் பாட்டில் ஈசன்பால் நேசம் கொண்ட நேரிழையார்க்குப் பரம்பொருள் பெருங்கருணை உள்ளத்துடன் எளிவந்த பிரானாய் அருளும் மாண்பினை அழகுடன் வாதவூரடிகள் அறிவுறுத்தினார். இத்திருப்பாட்டில் பாவையர்களாகிய ஆன்மாக்களின் சிறுமையைக் களைந்து, திருவருள் பாலிக்கும் பரம்பொருளின் பெருங்கருணைத் திறம் பேசப்படுகிறது.

படுத்திருக்கும் பாவையைக் குழுவாக வந்த மங்கையர் கள் “முத்தன்ன வெண்ணகையாய் என முன்னிலைப்படுத்தி மொழிகின்றனர். படுக்கையை விட்டு எழ வேண்டிய பாவை நல்லுறக்கத்தின் தெளிவினால் அகப்பொலிவும் முகத் தெளிவும் கொண்டு விளங்குகிறாள். அழைக்க வந்தவர்களை வரவேற்கும் குறிப்போடு முத்துப் போன்ற பற்களை மெல்லத் திறந்து மெதுவாகச் சிரிக்கிறாள். இக்காட்சியை “முத்தன்ன வெண்ணகையாய் என்ற கவிதைச் சொற்கள் ஒவியம்போல் உணர்த்துகின்றன. வண்ணம், வடிவம் காரணமாக மங்கையரின் பற்களுக்கு முத்தினை உவமை கூறுவது கவிமரபு. ‘முத்துறள் முறுவல்’ என்பர் நக்கீரர். முத்து தமிழகத்தின் சொத்து. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தென்பாண்டி நாட்டின் கொற்கைத் துறைமுகத்தி லிருந்து முத்துக்கள் கிரேக்கம் முதலிய மேலை நாடுகளுக்கு வாணிகப் பொருளாக வழங்கப் பெற்றன என்பது வரலாறு. தென்பாண்டி நாட்டவராகிய மணிவாசகப் பெருமான் முத்திற்கு உரிய மரியாதை தந்து, ஈசன்பால் நேசம்கொண்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/13&oldid=592199" இலிருந்து மீள்விக்கப்பட்டது