பக்கம்:பாவைப் பாட்டு.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 பாவைப் பாட்டு

விண்ணோர் பெருமானே’ என்றும் அவர் கட்புலனுக்கு அமைந்தவாறு மணிவாசகப் பெருந்தகையால் பேசப்பெறும். அம்மையாய் அப்பனாய் குருந்த மரத்தின் கீழிருந்து வருந் தாதே மெய்யுணர்வு உணர்த்திய ஆசானுமாய் விளங்கிய அவரைக் கண்ணுக்கினியான் என்றதில் வியப்பென்ன? ‘பாடிக் கசிந்து உள்ளம் உள்நெக்கு நின்று உருக’ என்பது ஆன்மாவை அவனுடைய மெய் மொழிகளால் அசைக்கின்ற முயற்சியிலே தோன்றும் இனிய அனுபவங்களாகும். நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து அன்பே நிறைந்து நிறைந்து ஊற்றெழும் கண்ணிர் அதனால் உடம்பு நனைந்து நனைந்து பெறுகின்ற அனுபவ நிலையை வள்ளலாரும் பேசு கின்றார். இத்தகைய அனுபவத்தை ஒருவர் உள்ளத்தில் விதைக்கும் ஆற்றல் பெற்றமையால்தான் “கருங்கல் மனமும் கரைந்து உகக் கண்கள் தொடுமணற்கேணியில் சுரந்து நீர் பாயும்’ என்றனர் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள். பாவைப் பெண்கள் தொடர்ந்து பேசுகிறார்கள். கால மெல்லாம் தூக்கத்தில் வீணடிக்கும் பெண்ணே எழுந்து வெளியே வந்துபார், எல்லோரும் வந்துவிட்டார்களா என்று. எண்ணிப்பார்த்து வருவோர் எண்ணிக்கை குறைந்திருந்தால் “ மீண்டும் போய்த் துரங்கலாம்’ என்று இடித்துப் பேசு கிறார்கள்.

வாதவூரடிகள் தாம் பெற்ற இறை அனுபவத்தை தீந்தமிழில் குழைத்துத் திருவெம்பாவையாக இனிக்கும்படி, எளிய மக்கள் உணர்கின்ற நிலையில் இயம்பியுள்ளார். எள்ளுவது போலவும் இடித்துரைப்பது போலவும் ஒருவர்க் கொருவர் வினாவியும் விடை கூறியும் வருகின்ற பாங்கில் எத்தனை ஆழமான பதிஞானத்தை இயம்புகிறார் என்பது எண்ணி மகிழ்தற்குரியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/19&oldid=592214" இலிருந்து மீள்விக்கப்பட்டது