பக்கம்:பாவைப் பாட்டு.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 பாவைப் பாட்டு

முடியுமா?மருந்து பற்றிச் சிந்தியாதிருக்க முடியுமா? பிறவி யென்னும் தொலைத்தற்கரிய நோயைக் கொண்டிருந்த நிலையிலும் இப்படி ஒர் உறக்கமா? என்றுகேட்பதை நாம் உணர்தல் வேண்டும். இவ்வாறெல்லாம் போற்றற்குரிய அவன் யாவன்? அவனை, “ஊழி முதல்வன்’ என்ற அரிய தொடரால் அறிமுகம் செய்கிறார் மணிவாசகர். உலக மெலாம் தோன்றுதற்கு முன்னும். உலகம் தோன்றிச் செயலொடுங்கி அழிந்து முடிந்ததன் பின்னும், பிறப்பு இறப்பிலனாய் நிற்கும் பெரியவனை ஊழி முதல்வன் என்றுதானே குறிக்க வேண்டும். ‘போக்கும் வரவும் புணர்வு மிலாப் புண்ணியனே, காக்குமெங் காவலனே காண்பரிய பேரொளியே” என்று தனித்து நிற்கும் அவனுக்கு ஆதியும் அந்தமும் இல்லையாகவே அவனே ஊழி ஆகிறான். இவ்வளவு பெரியவன். யார்க்கும் எதற்கும் ஒப்புரைக்க முடியாத ஒண்மைமிக்கவன் தனக்கு உரியவராகச் செல்வர் களையே நாடுவனோ? ஆம் உலக இயல்பு அதுதானே! செல்வம் உடையார் முன் இல்லார் ஏக்கற்று நிற்றல்தானே உலக இயற்கை. செல்வர்க்கே எல்லாரும் சேவடித் தொண்டு செய்கையில் சிவனும் செல்வரையே தனக்கு அடியாராகக் கொண்டால் ஆகாதோ? அப்படியன்று, பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள, அருட்செல்வமன்றோ செல்வத்துள் செல்வம். அச்செல்வமிக்க ஏழைகளிடம் பங்காளனாக இறைவன் வந்து உறைகின்றான், ஏழையின் பங்கில் இருப்பவன் இறைவன். ஆகவே, ஏழை பங்காளனையே பாடேலோர் எம்பாவாய்’ என்கிறது திருவெம்பாவைப் பாட்டு. மற்றும் ஒருபொருள் கூறுவர். ஏழை என்பது பெண்ணைக் குறிக்கும், இங்கு உமையம்மையினைக் குறித்தது, உமையினை இடப்பங்கில் உடையவன் ஏழை பங்காளன் ஆகிறான், அம்மையப்பனாக இப்பாடல்

இறைவனைப் போற்றுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/35&oldid=592274" இலிருந்து மீள்விக்கப்பட்டது