பக்கம்:பாவைப் பாட்டு.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதினோராவது திருப்பாடல்

சிவபிரானது உண்மை இயல்புகளை வினவுகின்ற பாங்கில் பாடிச் சென்ற கன்னியர்கள், பூக்கள் மலர்ந்து விளங்கும் பொய்கையினைச் சேர்கின்றனர். பளிங்குபோல், விளங்குவதாகத் துலங்கும் அக்குளத்து நீரைக் கண்டதும் அக்குளத்து நீரில் மூழ்கித் திளைத்து நீராடவேண்டுமென்ற பேரவா கன்னியர்கள் நெஞ்சில் மீதுார்ந்து நின்றது. புலர்ந்தும் புலராத அவ் வைகறை நேரத்தில் சில்லென்று குளிர்ந்த குளத்து நீரில் குதித்து நீராடவேண்டுமென்ற வேட்கை நெஞ்சில் நிறையவும், இவ்வாறு நீராடுதலுக்குக் காரணமாய் அமைந்த சிவபெருமான் திருவடிகளை முதற்கண் வழுத்துகின்றனர், நெஞ்சத்தில் நிறைந்த தங்களுடைய ஈடுபாடு வெளிப்பட ‘ஆரழல் போல் செய்யா. என்று அவ் இறைவனைப் பாடிப் பரவசம் அடைகின்றனர்.

செறிந்தமைந்த நெருப்புப் போலும் செக்கச்செவேல் எனும் நிறமுடைய திருமேனி வாய்ந்தவனே: வெண்ணிறம் கொண்ட திருநீற்றைப் பூசியவனே அருட்செல்வத்தை உடையவனாய் இருந்து அடியவர்களுக்கு அருள்பவனே, சிறிய இடையினையும் மை தீட்டிய அகன்ற கண்களையும் உடைய பெண்களில் பெருந்தக்கவராகத் திகழும் உமாதேவி யாரின் கணவனே: தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தலைவனே:என்று சிவபரம்பொருளைத் துதித்து வணங்கு கின்றனர்.

சிவபெருமான் என்றதும் கன்னியர்கள் நினைவிலே, அவர்களுக்கு உடனே நினைவுக்கு வருவது அவருடைய செந்நிறமும், கழுத்தில் அமைந்துள்ள கரிய நிறமுமாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/45&oldid=592311" இலிருந்து மீள்விக்கப்பட்டது