பக்கம்:பாவைப் பாட்டு.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 பாவைப் பாட்டு

அருளினார் என்பர். மார்கழித் திங்களில் புலர் காலைப் பொழுதில் மகளிர் நீராடச் செல்லுகின்றபோது இன்னும் உறங்கிக் கொண்டிருந்த தம் ஒத்த தோழியரை அழைக்கு முகமாகவும் அவர்களோடு உரையாடும் போக்கிலும் இப் பாடல்கள் இயற்றப்பட்டுள்ளன. மனோன்மணி, சர்வபூத தமனி, பலப்பிரமதனி, பலவிகரணி, கலவிகாரணி, காளி, ரெளத்திரி, சேட்டை, வாமி என்னும் ஒன்பது சக்திகளுள் முன்னின்றவர் பின்னின்றவரைத் துயில் எழுப்புமுகமாகவும் எல்லோரும் கூடிச் சிவபரம்பொருளைப் போற்றிப் பாடுவ தாகவும் அமைந்த பாடல்களின் தொகுதி திருவெம்பாவை எனத் தத்துவச் சார்புடையோர் கூறுவர்.

ஐந்தொழிலும் ஆற்றுகின்ற ஆற்றல் வாய்ந்த அலகிலா விளையாட்டு உடையவராகிய சிவபெருமானை, ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்சோதி என மணிவாசகப் பெருந்தகை உரைப்பதை எண்ணுதல் வேண்டும். உலகனைத் திற்கும் ஒளி வழங்கும் ஞாயிற்றுக்கும் தோற்ற ஒடுக்கமுண்டு. இப்பேரருள் பிழம்பிற்குத் தோற்றம் ஒடுக்கம் இல்லை. எக்காலத்தும் குன்றாத அப்பேரொளியே பசுக்களில் மும்மல இருளை அறுத்தகற்றி ஒளியேற்ற இயலும். இவ்வெல்லை யற்ற சோதியே அம்பலத்தாடுகின்ற காட்சிக்கினிய பெருமா னாகும். அதுவே அண்ணாமலையானாய், நான்முகற்கும் நாராயணற்கும் தேடிக் காணமுடியாத அடியும் முடியும் உடையதாய்ப் பொலிந்தது என்பது வரலாறு. இதனை வாதவூரடிகளே. ‘பார்பதம் அண்டம் அனைத்தும் பரந்த தோர் படரொளிப்பரப்பு என்று திருவாசகத்தில் கூறுவர். இச்சோதியைச் சுடரொளிப் பேற்றை நாட்காலையில் துயில் எழுந்த மகளிர் பாடிப்பரவி வீதிவழிச் செல்லுகின்றனர். இந் நிலையிலும் பெண்ணொருத்தி துயில் எழாமல் பொய் உறக்கம் கொண்டவளாய் அமளியில் புரண்டு கொண்டிருக் கின்றாள் இந்த வான்திடங்கண் மாதிற்கு வந்தது என்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/7&oldid=592347" இலிருந்து மீள்விக்கப்பட்டது