12
பிடி
சாளுக்கியன் பிடிப்பட்டவன், அடிமை, யுத்தக் கைதி என்று தன்னைப் பற்றிப் பல்லவ நாட்டவர் கேலி பேசினதால்கூட அவன் மனம் புண்படவில்லை.
“வாதாபி படுசூரணமாயிற்று.”
“சாளுக்கியம் சிதைந்தது.”
“புலிகேசி பிணமானான்.”
இந்த வார்த்தைகள், எந்தப் பக்கத்திலும் கிளம்பின! நாலா பக்கங்களிலிருந்தும் அம்புகள், வேல், ஈட்டி முதலியன பாய்ந்துவந்து தாக்குவதுபோல, சாளுக்கியனின் செவியில், இந்த வார்த்தைகள் வீழ்ந்தன.
வேலை ஒன்றும் கடினமில்லை. அதிலும், அவன் வேலைக்கு அமர்ந்திருந்த இடம், பல்லவ சாம்ராஜ்யாதிபதியின் அரண்மனைக்கு அடுத்த அந்தஸ்துள்ளது! படைத்தலைவர் பரஞ்சோதியிடம், அந்தச் சாளுக்கியன் வேலைக்கு அமர்ந்தான். தாய் நாட்டின் வெற்றிக்காக, வீரவாளேந்தி, பணி புரிந்து வந்த அந்தச் சாளுக்கியனுக்கு, என்ன வேலை கிடைத்தது? பரஞ்ஜோதியின் ஆயுதச் சாலையில் காவல்!! பரஞ்ஜோதிக்கு அடைப்பம் தாங்கும் பணி; எடுபிடி வேலை செய்வது, நிலத்தில் உழுவது, தோட்டக்காவல்—இப்படி ஏதேனும் வேலை தந்திருந்தால்கூட, அந்தச் சாளுக்கியனின் மனம் வேதனை அடைந்திருக்காது. ஆளப் பிறந்தவர்கள்கூட ஆளடிமையானதுண்டு. படையிலே பணி புரிய வேண்டியவன், பணியாளானால் பரவாயில்லை; சகித்துக் கொள்ளலாம் என்றாவது தோன்றும். ஆனால், சாளுக்கியனுக்குத் தரப்பட்ட வேலை, பரஞ்ஜோதியின் ஆயுதச் சாலையிலே காவல் புரிவது!
அந்த வாள்—எத்தனையோ சாளுக்கியப் படைத்தளபதிகளின் சிரங்களை வெட்டி வீழ்த்திய வாள்! சாளுக்கியரின் குருதி தோய்ந்த வாள்! வேல்! அம்பு! ஈட்டி! எறிவாள்!சொருகுவாள்! வளை, மற்றும் பல பொறிகள் எல்லாம் சாளுக்கிய சாம்ராஜ்ய அழிவுக்குப் பயன்பட்ட கருவிகள்!