22
பிடி
“வருத்தமோ, வெட்கமோ வேண்டாம் நண்பர்களே! மகேந்திரன் காலத்திலே, தோல்வி கண்டீர்கள். பெருந்தோல்வி. வீரர்களே! வீரமும் தீரமும் நிறைந்த வேந்தன் புலிகேசியின் படைகள், பல்லவ நாட்டுக்குப் பயங்கரமானதோர் புயலாயிற்று. அதைத் தாங்க மாட்டாது தவித்த பல்லவப்படைதான், இன்று வாதாபியை வென்றது”
“ஆமாம்.”
“எப்படி முடிந்தது என்று கேட்கிறேன்.”
“இது என்ன கேள்வி? வீர தீரமிக்க எமது படைகள், ஆற்றல் மிக்க எமது தலைவர், பரஞ்ஜோதியின் திறமையால் வெற்றி கிடைத்தது.”
“உண்மைக்கு வெகு அருகாமையில் வந்துவிட்டீர்களே! பரஞ்ஜோதி! ஆம்! அந்தச் சைவரின் பலம்! சைவத்தின் மகிமை! அதுதான் வெற்றியைத் தேடித்தந்தது. படைத்தலைவரின் சிவசக்தியே பல்லவத்தின் வெற்றிக்குக் காரணம், வாதாபியை, உமது படைவீரரா கொளுத்தினர் என்று எண்ணுகிறீர்! பித்தம் உங்களுக்கு. சிவபக்தராம் பரஞ்ஜோதி, சைவத்தின் பலத்தை, எமக்கு விளக்க அல்ல, வைணவ நரசிம்ம மன்னருக்கு விளக்க, திருபுராந்தகனை வேண்டித் தொழ, அவர் தமது நெற்றிக் கண்ணைத் திறந்தார்—ஒருகணம்: ஆமாம்! எமது வாதாபி எரிந்தது—பிடிசாம்பல்! பிடிசாம்பல்! முடிவிலோர் பிடிசாம்பலாயிற்று!”
சாளுக்கியன், சைவத்தின் மேன்மையை வெற்றிக்குக் காரணம் என்பதை விளக்கினது, கலங்கிக் கிடந்த வைணவருக்கு, மேலும் கலக்கத்தைக் கொடுத்தது. அவர்களுக்கு ஆத்திரமாகத்தான் இருந்தது. அவன்மீது அடங்காக்கோபம் ஏற்பட்டது. அவன் பொய்யுரைத்திருப்பின், கோபம் பொங்கிப் பிறகு அடங்கிவிட்டிருக்கும். ஆனால் அவன் சொன்னதை எண்ணிப் பார்க்கப் பார்க்க, அவன் உரையிலே உண்மை இருக்கக் கண்டனர். காணவே, கோபம் மேலும் மேலும் கொதித்தது!