பக்கம்:பிடி சாம்பல்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

பிடி

பல்லவர் படை வரிசையிலே மட்டுமல்ல, பரஞ்ஜோதியார் நினைவு சென்றது. தாக்க வரும் சாளுக்கியப் படையிலும் அதே பேச்சுத்தான். ஒரு பிரிவுக்குத் தலைமை வகித்துக் கெம்பீரமாக வருகிறான் வில்லாளன்—“பாய்ந்து செல்லுங்கள்! பயமின்றிச் செல்லுங்கள்! வெற்றி நிச்சயமென்ற உறுதியுடன் செல்லுங்கள்! பல்லவ நாடு, பரஞ்ஜோதியில்லா நாடு! பயமில்லை, படைகளை மட்டும் படைத்த நாடு, படைத்தலைவர் மடத்தினுள் சென்றுவிட்டார். பிடி சாம்பலால் பெரும் படைத்தலைவனை, சிறுத் தொண்டனாக்கிவிட்டேன். இனி பயமில்லை, ஜெயமுண்டு, செல்க!” என்று கூவினான் களிப்புடன்.

அவன் சொன்னது சரியாகவே இருந்தது. வெற்றி சாளுக்கிய மன்னனுக்கே. புலிகேசியின் புதல்வன், நரசிம்மனின் மகனைத் தோற்கடித்தான். காஞ்சிபுரத்தில் தோற்ற மன்னன், வாதாபியை எண்ணாதிருந்திருக்க முடியுமா! வாளிழந்து நின்றபோது, பரஞ்ஜோதியைப் பற்றிய நினைவு வராமலிருக்க முடியுமா? வெற்றி பெற்ற சாளுக்கியப் படை வெறியாட்டமாடிக் கொண்டு, காஞ்சிபுரத் தெருக்களிலே பவனி வந்தபோது, சில ஆண்டுகளுக்கு முன்பு, சாளுக்கிய நாட்டிலே இருந்து கொண்டுவந்த பொருளின் குவியல்கள், யானை மீதும் குதிரைமீதும் ஏற்றப்பட்டு, முன்னே செல்ல, வெற்றிச் சங்கொலிக்க, பின்னே, பிடிபட்ட சாளுக்கியர்கள் வரிசையாக நடத்திவரப்பட, இருமருங்கும் ஊர் மக்கள் நின்று வாழ்த்தொலி கூற, பரஞ்ஜோதி, வாதாபியை வென்ற வீரன் பவனி வந்த காட்சி, மக்கள் மனக்கண்முன் தோன்றாதிருக்க முடியுமா? கண்கள் குளமாயின!

பரஞ்ஜோதி வெற்றிப் பவனி வந்த வீதிகளில் சாளுக்கிய மன்னன் பவனி வந்தான். அவன் சித்திரகாந்தா எனும் குதிரை மீதமர்ந்து வந்தான். அவனுடைய படைகள் சாளுக்கிய நாட்டுக்கு வாழ்த்தொலி கூறின, பல்லவ நாட்டுத் தலைநகருக்குள்.

பல்லவ மன்னனைப் பணியச் செய்தான் சாளுக்கியன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிடி_சாம்பல்.pdf/48&oldid=1766547" இலிருந்து மீள்விக்கப்பட்டது