பக்கம்:பிடி சாம்பல்.pdf/54

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

பிடி

ஆச்சரியப் பகுதி என்னை எனில், படைத்தலைவர், சிவபக்தர் என்ற விஷயமும், மன்னனுக்கு மந்திரி சொல்லித்தான் தெரிய வருகிறது!

இறைஞ்சுதலும் முன்னிறைஞ்சி என்னுரிமைத் தொழிற்கடுத்த
திறம்புரிவேன் அதற்கென்னோ தீங்கென்ன, ஆங்கவர்க்கு
நிறைந்த நிதிக்குவைகளுடன் நீடுவிருத்திகள் அளித்தே
அறம்புரி செங்கோலரசன் அஞ்சலி செய்துரைக்கின்றான்.

மன்னனைப் பரஞ்ஜோதி வணங்கி, என் தொழில் போரிடுவது, அதைச் செய்வதிலே தீது என்ன? அது என் கடமை என்று கூற, மன்னனோ, அவருக்கு ஏராளமாகப் பரிசுகள் வழங்கிப் பேசலானான் என்பது இச்செய்யுளின் பொருள்.

உம்முடைய நிலைமையினை அறியாமை கொண்டுய்த்தீர்
எம்முடைய மனக்கருத்துக்கினிதாக இசைந்துமது
மெய்ம்மைபுரி செயல் விளங்க வேண்டியவாறே சரித்து
செம்மை நெறித்திருத் தொண்டு செய்யும் என விடையளித்தான்.

அப்படியல்ல, அறனடியாரே! உமது பெருமையை உணராமல் இருந்துவிட்டேன். இனி நீர் மடத்தில் சென்று சிவத்தொண்டு புரிக! என்று மன்னன் கூறி அனுப்பிவிட்டான் என்பது இச்செய்யுளின் கருத்து.

இனி யோசியுங்கள். விலக்கப்பட்டார் பரஞ்ஜோதி; அதற்காக விசாரப்பட்டார் என்று நான் கூறினது தவறா? செய்யுள் யாவும், பெரிய புராணம்—நமது சரக்கல்ல. ஒவ்வொரு செய்யுளுக்கு உள்ளேயும், இடையிடையேயும் புதைந்துள்ள பொருளை, யூகித்துத் தீட்டினேன்—சிந்தனையைக் கிளற.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிடி_சாம்பல்.pdf/54&oldid=1768023" இலிருந்து மீள்விக்கப்பட்டது