பக்கம்:பிடி சாம்பல்.pdf/56

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
2
ஒளியூரில்

‘ரதிமதன்’ நாடகம் நடத்த வேண்டுமானால், ராமப்பிரசாதனும், வாசமல்லிகாவும் அப்படியே அரங்கம் ஏறி நின்றால் போதும்; தத்ரூபமாக இருக்கும். “எப்படித்தான் கிடைத்ததோ அந்த எழில், இருவருக்கும்! எவ்வளவு பொருத்தமாக அமைந்திருக்கிறது அந்த ஜோடி” என்றான் சத்ரு சங்காரன்.

“அமைந்திருக்கிறது என்று கூறாதே, அமைய இருக்கிறது என்று சொல்” என்று திருத்தினான் காலியபூபதி.

“தடை என்ன இருக்கிறது. அவர்கள் தம்பதிகளாவதில்? ராமப்பிரசாதன் தகப்பனார் ரங்கராஜ பண்டிதர் தன் மகன், அழகிற் சிறந்தவளை அடைவதற்கான முயற்சியில் ஈடுபட்டபோதே ஆசீர்வதித்தாரே—அழகான மங்கை என்பதற்காக மட்டுமல்ல, ஐஸ்வரியமும் ஏராளமாக இருக்கிறது என்ற காரணத்தால். வாசமல்லிகாவின் தகப்பனாருக்கு வாணிபத்திலே ஏராளமாக இலாபம் குவிகிறது. பல அரசாங்கங்களுக்குப் பண்டங்கள் வாங்கித் தரும் பொறுப்பும் கூட அவரிடம் தரப்பட்டு இருக்கிறது. மண்டலாதிபதிகள், தம்முடன் சரிசமமாக அல்லவா நடத்தி வருகிறார்கள் பாஞ்சசன்ய பூபதியாரை! அவ்வளவு நல்ல செல்வாக்கு அவருக்கு” என்று விளக்கமளித்தான், சத்ரு சங்காரன்.

அந்த இருவர் மட்டுமல்ல, மாளிகை பலவற்றிலேயும் நிகழ இருக்கும் இந்த நேர்த்தியான திருமணத்தைப் பற்றிய பேச்சாகவே இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிடி_சாம்பல்.pdf/56&oldid=1768026" இலிருந்து மீள்விக்கப்பட்டது