பக்கம்:பிடி சாம்பல்.pdf/57

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒளியூரில்‌

57

காதல் கைகூடுகிறது என்ற நிலை ஏற்படும்போது, அலாதியாகப் பிறந்திடும் பேரழகுடன் வாசமல்லிகா விளங்கினாள். எந்த அரசரும் அவளை அதுவரையில் சிறை எடுத்துச் செல்லாததற்குக் காரணம், அவள் அப்படிப்பட்ட அழகி அல்ல என்பதல்ல. அந்தக் காலம், ருக்மணியைத் தூக்கிக் கொண்டோடிய கிருஷ்ணன் காலமல்ல; அந்த இடமும் உருமாறிக் கூடிடும் வித்தை அறிந்தவர் வாழும் விசித்திர உலகமுமல்ல.

வாசமல்லிகாவின் அழகு மணம், ராமப்பிரசாதனைத் கவருவதற்கு முன்பே, ரங்கராஜ பண்டிதரின் பூபதியாரிடம் இலயித்திருந்தது. பண்டிதருக்குப் போதுமான ‘தொழில்’ கிடைக்காத காலம் அது. அரச அவைகள் இருந்தன. ஆன்றோர் கூடிடும் அரங்குகளும் இருந்தன. மக்கள் மன்றங்களும் இருந்தன. எனினும், அங்கெல்லாம் முன்பு போலப் பண்டிதர்களுக்கு கெம்பிரக்குரலெழுப்பி, பகவானின் பல்வேறு திருவிளையாடல்களைக் குறித்துப் பாடியும் பேசியும், பக்திரசம் ஊட்டி, பரிசும் பலிஷும் பெறுவதற்கான வாய்ப்பு கிடைப்பதில்லை. பூஜாமாடங்களிலே, எப்போதும்போல முரளிதரன் இருந்தான்; கோதண்டபாணி கோயிலில் ஆறுகால பூஜை, எப்போதும்போல நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தது. துளசி மாடங்களைச் சுற்றிவந்து தத்தம் நாயகர்கள், குறைவற்ற செல்வத்துடனும், நீண்ட ஆயுளுடனும் வாழ அருள் புரியும் என்று வேண்டிக் கொண்டுதான் இருந்தார்கள். ஆனால் எல்லாவற்றிலும் தரக்குறைவோ, ரசக் குறைவோ இருப்பதுபோலக் காணப்பட்டது. ஆலயமணி ஓசையிலேகூடக் கெம்பீரம் குறைந்து சோகம் ஒலித்தது.

“பத்துநாள் போகட்டும்; பிறகுதான் நிச்சயமாக எதையும் சொல்லமுடியும். இப்போதைக்குப் பிராணபயம் உடனடியாக இல்லை. நாடியிலே கோளாறு இல்லை. ஆனால் நாளை மறுநாள் என்ன ஆகிறதென்று எப்படிக் கூறமுடியும்? எதற்கும் ஒரு பத்து நாள் கழியட்டும்!” என்று மருத்துவர் கூறுவது கேட்ட இல்லத்தார், நோயாளியை எந்த நோக்கு-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிடி_சாம்பல்.pdf/57&oldid=1768901" இலிருந்து மீள்விக்கப்பட்டது