பக்கம்:பிடி சாம்பல்.pdf/60

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

ஒளியூரில்‌

சங்கு சக்ரதாரியாக விஷ்ணு பகவான் கோயிலில் நின்று கொண்டிருந்தார் எப்போதும்போல; வழக்கப்படி அவருக்கு ஆராதனைகள் நடைபெற்றுக் கொண்டு வந்தன. எதிரே நின்று எப்போதும்போல, கைகூப்பித் தொழுதனர் பக்தர்கள். ஆனால் அவர்கள் உள்ளத்தில் இருந்த பக்தி, பிசுபிசுத்துக் கொண்டிருந்தது. சுடர் விட்டெரியும் திருவிளக்கு தரும் ஒளியில், ‘கமலக் கண்கள்’ தெரிந்தன. முன்பெல்லாம், விழியைத் திறந்து அவர் பார்ப்பது போன்றே ஒரு ‘பிரமை’ தோன்றும் பக்தர்களுக்கு—இப்போது அப்படித் தோன்றவில்லை.

‘என்ன கனிவு! எவ்வளவு கவர்ச்சி! அந்தக் கண்களில் அருள் ஒழுகிடக் கண்டேன்; புளகாங்கிதம் கொண்டேன்!’ என்று உருகி உரைப்பர்—முன்பு. இப்போது மனு கொடுத்தவன் வந்து நிற்பதைக் கவனியாமல் குறிப்பேட்டினைப் புரட்டி கொண்டிருக்கும் கொத்தவால் முன்பு நின்றுகொண்டு ஆர்ப்பாட்டத்துக்குக் குறைச்சலில்லை. அலுவலகத்தில் அமுலுக்குப் பஞ்சமில்லை; ஓயாது வேலை செய்வது போலத்தான் காணப்படுகிறார். என்றாலும் என்ன பலன்? களவு போன என் பொருளைக் கண்டுபிடித்துத் தரும் திறமை மட்டும் இல்லை—‘இப்படி ஒரு கொத்தவால் இருக்கிறார், நாமும் இவரிடம் வந்து வந்து குறையைக் கூறிவிட்டுப் போகிறோம்’ என்று சலிப்புடன் எண்ணிக் கொள்ளும், கிராமத்துக் கிழவன்போலக் கடவுளின் சன்னதியில் நின்று கொண்டிருந்தனர். முன்பெல்லாம் தவறி எங்கே தவறான, கேவலமான, ஆசாபாச உணர்ச்சிகள் ஆண்டவன் ஆலயத்திலே இருக்கும்போது உள்ளத்தில் தலைதூக்கிவிடுமோ, தேவனுடைய கோபத்துக்கு ஆளாக நேரிடுமோ என்று திகில் கொண்டு, “தேவ தேவா! எம்மைக் காத்தருளும்; சத்ய நெறியின்றும் தவறி நடக்காத மன உறுதியைத் தாரும்; தீய எண்ணங்கள் எம்மைத் தீண்டாதபடி தடுத்தாட்கொள்ளும்; சகல பாவங்களையும் சம்ஹரிக்கும் தங்கள் திருப்பார்வையை, நாயினும் கடையராம் எம்மீது சிறிது செலுத்தும். பிரபோ! பித்துமனம் கொண்ட நான், செய்துள்ள பிழை-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிடி_சாம்பல்.pdf/60&oldid=1768911" இலிருந்து மீள்விக்கப்பட்டது