பக்கம்:பித்தளை அல்ல பொன்னேதான்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பொன்னேதான்!

7

சுக்கு வந்து வருஷம் மூணு ஆகுது. அதுக்கு ஒரு கல்யாணத்தைச் செய்து வைக்கணுமே, எவன் கிடைப்பான் என்று நான் தவியாத் தவிக்கிறேன். உன்னுடைய யோக்யதை ஊர் சிரிக்கறதாலே ஒருபயலும் வரமாட்டேன் என்கிறானே, அவளைக் கட்டிக்க. ஏண்டா என் வயத்தெரிச்சலைக் கொட்டிக்கொள்றே."

மளமளவென்று வளர்ந்துவிட்டான் முத்துச்சாமி. ஆனால் ஒரு இடத்திலும் நிலைத்து வேலைக்கு இருப்பதில்லை.படிப்பு இல்லை; கூலி வேலை செய்வதுதான் என்று நிலை என்றாலும், யாராவது நாலு வார்த்தை ஏசிவிட்டால், அவனால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. கோபம் கோபமாக வரும். கண்மண் தெரியாமல் நடந்துகொள்வான்.

"வீட்டுக்கு அடங்காததை ஊர்தான் அடக்க வேண்டும்.." என்று பலர், அவன் காதில் விழுகிறபடி சொல்லுவார்கள். அவர்கள் இருந்த குப்பத்தில், மற்ற வீடுகளில், தங்கள் பிள்ளைகளை முத்துசாமியுடன் மட்டும் பேசக்கூடாது என்று கண்டிப்பான உத்திரவு போட்டு இருந்தார்கள். அவனிடம் பேசவே, அவனை ஒத்த வாலிபர்கள் கூச்சப்படுவார்கள். அவனிடம் அந்த நிலையிலும், அன்பு காட்டி, சிரித்து விளையாடி பேசி வந்தது, அவனுடைய தங்கச்சிதான்'— கூடப் பிறந்தது அல்ல—கூடப் பிறந்தது தனக்குக் கலியாணம் ஆகாமலிருப்பதற்குக் காரணமே, தன் அண்ணன்தான் என்று எண்ணிக் கொண்டு, முத்துவைக் கண்டவுடன் சீறும் சுபாவம் கொண்டுவிட்டிருந்தது. முத்துவிடம் பாசம் காட்டிப் பழகியது. எட்டு வயதுத் தங்கை—அப்பாவின் இரண்டாந் தாரத்துக்குப் பிறந்த பெண்.

"அவ புண்ணியவதி, இந்தக் கண்றாவியைப் பார்க்காமல் பூவோடும் மஞ்சளோடும் நல்ல கதிக்குப் போய்விட்டாள்," என்று சில நேரத்திலும்.

"அடிப் பாவி! என் தலையிலே இந்தச் சனியனைக் கட்டிவிட்டு, பாடுபடுடாப் பாவின்னு சொல்லிவிட்டு நீ கண்ணை மூடிட்டே." என்று சில வேளைகளிலும் முத்துவின் தகப்பனார் அப்பாசாமி கதறுவார்.