பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

146

பிரதாப முதலியார் சரித்திரம்

உருவெளித் தோற்றமோ என்று நான் மயங்கிக் கொண்டிருக்கையில், அவளுடைய கண்ணீர்ப் பிரவாகம் என் முகத்தின்மேல் விழுந்து என் மயக்கத்தைத் தெளிவித்தது. உடனே அவள் என்னைத் தழுவிக்கொண்டு,“ “நான் உங்களுக்கு என்ன அபராதம் செய்தேன்? என் முகத்தில் விழிக்காமல் வந்து விட்டீர்களே”” என்று கண்ணீர் விட்டுப் பொருமினாள். நானும் சற்று நேரம் கண் கலங்கின பிற்பாடு அவளைப் பார்த்து “””நான் இன்றையத்தினம் புறப்படுகிறேனென்பதும், இந்த வழியாய்ப் போகிறேனென்பதும் உனக்கெப்படித் தெரியும்? நீ இவ்வளவு தூரம் எப்படி வந்தாய்?””” என்று கேட்க அவள் சொல்லுகிறாள்: ””“நீங்கள் பிரயாணம் புறப்படுகிறது நிச்சயமென்று, உங்கள் கடிதங்களால் அறிந்து கொண்டேன். நீங்கள் எங்கே போனாலும் உங்களுக்குப் பிரியமான ஊழியக்காரர் களாகிய கந்தசாமி, வினைதீர்த்தான் இவர்களைக் கூட அழைத்துக்கொண்டு போவீர்களென்பதும், எனக்குத் தெரியும். அவர்களுடைய பெண்சாதிகள் எனக்குத் தாதிகளானதினாலே அவர்களுடைய புருஷர்களை விசாரித்து, நீங்கள் புறப்படுகிற நிச்சயமான தினத்தை அறியும்படி சொல்லியிருந்தேன். நீங்கள் உங்களுடைய பெண்சாதிக்கு உண்மையை மறைத்தாலும் உங்களுடைய வேலைக்காரர்கள் அவர்களுடைய பெண்சாதிகளுக்கு உண்மையை மறைக்கவில்லை. ஆகையால் அவர்கள் மூலமாக நீங்கள் புறப்படுகிற தினத்தைத் தெரிந்துகொண்டு நானும் புறப்படுகிறதற்கு முஸ்திப்பாயிருந்தேன். என்னுடைய தாதிகளும் தங்கள் புருஷர்களைப் பிரிந்திருக்க மனமில்லாதவர்களாய்த் தங்களை அழைத்துக்கொண்டு போகும்படி பிரார்த்தித்தார்கள். அவர்களும் நானும் புறப்பட்டுச் சற்று நேரத்திற்குப் பின்பு ஒருவருக்குந் தெரியாமல் ஒரு பண்டியின் மேலே ஏறிக்கொண்டு உங்களுடைய கண்ணிலே படாமல் கொஞ்சதூரம் பின்னிட்டு உங்களுடைய பண்டியைத் தொடர்ந்து கொண்டு வந்து சேர்ந்தோம்”” என்றாள்.