பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

164

பிரதாப முதலியார் சரித்திரம்

பிள்ளைக்கு ஒன்பதாம் வயதும் நடக்கும்பொழுதும் கஷ்டகாலம் ஆரம்பித்தது. அந்தப் பிள்ளையைத் தகப்பன் திரும்பிப்பார்க்கிறதே யில்லை. தகப்பனுக்கு ஒரு அற்பத் துன்பம் நேரிட்டாலும், மூத்த பிள்ளையினுடைய ஜாதகப் பலன் என்று நினைத்து அந்தப் பிள்ளையைத் தகப்பன் விரோதித்து வந்ததுந் தவிர, இளைய பிள்ளையும் தமையன் மேலே கோளுங்குறைகளையுஞ் சொல்லித் தகப்பனுடைய துவேஷம் அதிகரிக்கும்படி செய்தான். மூத்த பிள்ளை இன்னும் சில நாள் வரைக்கும் தகப்பன் வீட்டில் இருந்திருப்பானானால் அவனுடைய ஆயுசு முடிந்து தாய் போன இடத்துக்குப் போயிருப்பான் என்பது சத்தியம். அவன் படுகிற கஷ்ட நிஷ்டூரங்களை அவன் தாயுடன் பிறந்த அம்மான் கேள்விப்பட்டு, அவன் வந்து அந்தப்பிள்ளையைத் தன் வீட்டுக்குக் கொண்டுபோய்ச் சம்ரக்ஷித்துவந்தான். அவன் எப்படியாவது தொலைந்தானே யென்று தகப்பன் சந்துஷ்டியடைந்து தன்னுடைய பிரியத்தையெல்லாம் இளைய பிள்ளைக்கே தத்தஞ் செய்துவிட்டான். மூத்த பிள்ளைக்கு இருபத்திரண்டு வயது நடக்கும்போது தகப்பனுக்குக் கபவாத சுரங்கண்டு அநேக மாசம் வரைக்கும் அவஸ்தைப்பட்டான். அந்த வியாதியும் மூத்த பிள்ளையினுடைய ஜாதக விசேஷத்தால் நேரிட்டதென்று தகப்பன் எண்ணி அந்தப் பிள்ளைக்கு ஒன்றும் வைக்காமல் சகல சொத்துக்களுக்கும் இளைய பிள்ளையைப் பாத்தியப்படுத்திப் பிரசித்தமாக ஒரு மரண சாசனம் எழுதிவைத்தான். மூத்த பிள்ளை நற்குண சம்பன்னன் ஆகையால் தகப்பன் என்ன கொடுமை செய்தாலும் அதைப் பாராட்டாமல் வியாதியாயிருக்கிற தன் தகப்பனை அடிக்கடி போய்ப் பார்த்துக்கொண்டு வருவான். அவனைக் கண்டபோதெல்லாம் தகப்பன் பாம்புபோல் சீறி, வைது, துரத்திக்கொண்டு வந்தான். ஒரு நாள், விழலினால் ஙேயப்பட்டிருந்த மேல் மாடியில்