பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

198

பிரதாப முதலியார் சரித்திரம்

தேவராஜப் பிள்ளைக்குக் காட்டி, அது முழுவதும் யார் கையெழுத்து என்று கேட்டார்கள். அவர் மேல் விலாசமட்டும் தம்முடைய கையெழுத்தென்றும் உள்ளேயிருக்கிற கடிதம் தமது கையெழுத்து அல்லவென்றும் தம்முடைய லிகிதம் போல் யாரோ எழுதியிருப்பதாகவும் சொன்னார்.

மூன்று விசாரணைக் கர்த்தர்களும் ஒரு அறைக்குள்ளே போய் ஆலோசிக்கத் தொடங்கினார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் நெடு நேரம் சம்வாதஞ் செய்துகொண்டு பிற்பாடு வெளியே வந்து சிம்மாசனரூடர் ஆனார்கள். அவர்களில் கலெக்டர் வீட்டில் இறங்கியிருந்த இரண்டு விசாரணைக் கர்த்தர்களும் அநேக சிப்பாய்கள் உருவின கத்திகளுடனே எங்களைச் சுற்றிக் காவலாயிருக்கும்படி செய்வித்து தீர்மானம் சொல்லத் தொடங்கினார்கள்: “இந்த விஷயத்தில் நாங்கள் இருவரும் ஒரே அபிப்பிராயமா யிருக்கிறோம். ஒரு விசாரணைக் கர்த்தர் மட்டும் எங்கள் அபிப்பிராயத்துக்கு இசையவில்லை. அப்படியிருந்தாலும் அந்த ஒரு விசாரணைக் கர்த்தருடைய அபிப்பிராயத்தைப் பார்க்கிலும் இருவருடைய அபிப்பிராயம் விசேஷமானதால் எங்களுடைய அபிப்பிராயத்தைச் சொல்லுகிறோம். இந்த விஷயத்தில் சாட்சி சொன்ன ஒருவருடைய வார்த்தையையாவது நாம் நம்பவில்லை. எல்லோருமாய்க் கூடிப் பெரிய பொய்க்கோட்டை கட்டியிருக்கிறார்கள் என்பது சத்தியமே. சந்ததி இல்லாமல் பாளையதார் இறந்துபோனால் பாளையப்பட்டு கவர்ன்மெண்டுக்குச் சித்தித்துப் போமென்று யோசித்து கவர்ன்மெண்டாரை மோசஞ் செய்வதற்காக இப்படிப்பட்ட அபாண்டமான பொய்யை உண்டுபண்ணி யிருப்பதாக அபிப்பிராயப் படுகிறோம். ஏழைகளாயிருந்து பொய் சொன்னாலும் அதை க்ஷமிக்கலாம். பெரிய பிரபுக்களென்று பெயர் வைத்துக்கொண்டு பொய்ச் சத்தியஞ் செய்து பொய்ச் சாட்சியம் சொல்லியிருப்பது பெரிய அக்கிரமமாகவும் பிரபல துன்மார்க்கமாகவும் இருக்கின்றது. இந்தியா தேச முழுதும் தெரியும்