பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/406

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

362

பிரதாப முதலியார் சரித்திரம்

தாலும் ஒருவரையும் மரணம் விடுவதில்லை. செத்துப்போன பிணத்துக்காக இனிமேல் இறக்கப்போகிற பிணம் கத்துகிறதென்று பட்டணத்துப் பிள்ளை சொன்னது உண்மை தானே! இதற்கு நூறு வருஷத்திற்கு முன் இருந்த ஜனங்களில் யாராவது ஒருவர் இப்போது இருக்கிறார்களா? அவர்கள் எல்லாரும் இறந்துபோய் அவர்களுடைய சந்ததிகள் இப்போது உலகத்தில் வசிக்கிறார்கள். இன்னும் நூறு வருஷத்திற்குள் இப்போது இருக்கிற சகல ஜனங்களும் மடிந்துபோய் அவர்களுடைய சந்ததிகள் வருவார்களென்பதற்குச் சந்தேகமா? மரங்களில் இலைகள் பழுத்து உதிர்ந்துபோய்ப் புது இலைகள் உண்டாவதுபோல், உலகத்திலுள்ள ஜனங்கள் புதிது புதிதாக மாறிக்கொண்டே யிருக்கிறார்கள். காணப்பட்ட பொருள்களெல்லாம் அழிந்துபோவது நிச்சயமே. பூலோக வாழ்வைப் போல அநிச்சயமான காரியமும் வேறொன்றும் இல்லை. நேற்று இருந்தவர் இன்றைக்கு இல்லை. இன்றைக்கு இருக்கிறவர்கள் நாளைக்கு இரார்கள். நாம் அடுத்த நிமிஷத்தில் ஜீவித்திருப்போமென்பது நிச்சயமில்லை.

ஞானாம்பாள் ஊரில் வந்தாவது இறந்து போகாமல், மார்க்கத்தில் இறந்துபோனதற்காக நாம் அதிகமாகத் துக்கிக்கிறோம். அவள் ஊரில் வந்து இறந்துபோனால் நாம் துக்கிக்காமல் இருப்போமா? நாட்டில் இருந்தாலும், காட்டில் இருந்தாலும், வீட்டிலிருந்தாலும், எங்கே இருந்தாலும் இறப்பது நிச்சயந்தானே! மரணத்தை யார் தடுக்கக் கூடும்?

தலைமுறை தலை முறையாய்க் கப்பலில் ஜீவனம் செய்கிற ஒரு மாலுமியை அவனுடைய நேசன், ’உன்னுடைய முப்பாட்டன் எங்கே இறந்துபோனான்?’ என்று கேட்டான். ‘கப்பலில் இறந்து போனான்’ என்று மாலுமி சொன்னான். ’உன் பாட்டன் எங்கே இறந்து போனான்?’ என்று சினேகிதன் கேட்க, ’அவனுஞ் சமுத்திரத்திலே