பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

x

தான் இருக்கின்றன. எனினும், நம் முன்னோரின் சரித்திரங்களையும் அரசியல் முறைகளையும் நாகரிகங்களையும் நம் தாய் மொழியில் படித்தறிந்துகொள்வதைக் காட்டிலும் நமக்கு மகிழ்ச்சியும் ஊக்கமும் அளிக்கத்தக்கது வேறொன்றுமில்லை. ஆனால், ஆராய்ச்சி முறையில் எழுதப்பெற்ற அத்தகைய நூல்கள் நம் தமிழ்மொழியில் மிகுதியாக வெளிவரவில்லை.

நம் தமிழ் நாட்டின் பழைய வரலாற்றை எழுதுவதற்குத் தக்க சாதனங்கள் இல்லையெனவும் அதனால் தான் சரித்திர நூல்கள் மிகுதியாக எழுதப்பெறவில்லை எனவும் ஒரு சிலர் குறைகூறுகின்றனர். அவர்கள் அங்ஙனம் கூறுவதற்குக் காரணம் உண்மையான தாய்நாட்டுப் பற்றும் ஊக்கமும் உழைப்பும் இல்லாமையேயாம். நாகரிகம்பெற்ற ஒரு நாட்டினர், தம் பழைய சரித்திரங்களை இவ்வாறு புறக்கணித்து விட்டால் அன்னோர் தம் பண்டைப் பெருமையை இழந்தவ ராகக் கருதப்படுவர் என்பது ஒருதலை.

பண்டைத் தமிழ் வேந்தர்கள் எடுப்பித்த திருக்கோயில்களில் காணப்படும் பல்லாயிரக்கணக்கான கல்வெட்டுக்களும் அவ்வரசர்கள் வழங்கிய கொடைத்திறங்களைக் கூறும் செப்பேடுகளும் அவர்கள் கட்டியுள்ள கோயில்களின் சிற்ப அமைதியும் அன்னோர் ஆட்சியில் வழங்கிய நாணயங்களும் அம் மன்னர்களின் பேராதரவினால் வெளிவந்துள்ள தமிழ் நூல்களும் நம் நாட்டின் பண்டைச் சரித்திரங்களை ஆராய்ந்தெழுதுவதற்குப் பெரிதும் பயன்படுவனவாகும். அன்றியும் வெளிநாடுகளிலிருந்து நம் தமிழ் நாட்டிற்கு வந்து பலவிடங்களைச் சுற்றிப்பார்த்துச் சென்ற யாத்திரிகர்களின் குறிப்புக்களும் தமிழகத்தோடு வாணிகத் தொடர்புகொண்டு நிலவிய புற நாட்டு வரலாறுகளும் நம் நாட்டு வரலாற்றாராய்ச்சிக்குப் பேருதவி புரிதல் அறியத்தக்கது. சங்ககாலத்திற்கு முற்பட்ட தமிழ் மக்கள் வரலாற்றை அறிதற்கு ஆதிச்சநல்லூர், அரிக்காமேடு, மொஹஞ்சதரோ, ஹாரப்பா முதலான இடங் களில் நிலத்தில் அகழ்ந்தெடுத்த புதைபொருள்கள் நன்கு பயன்படுதலைச் சரித்திர ஆராய்ச்சியில் வல்ல அறிஞர் பலரும் அறிவர். எனவே, வரலாற்றாராய்ச்சிக்கு நம் நாட்டில் தக்க