பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xii

யிடுவது எல்லா மக்கட்கும் நலம் புரியும் நற்றொண்டாகும். இக்கருத்தினையுட்கொண்டே 'பிற்காலச் சோழர் சரித்திரம்' என்ற இந்நூல் நம் தாய்மொழியாகிய தமிழில் எழுதப்பெற்றது என்பது யாவரும் அறியற்பாலதாகும்.

நிற்க, இளமையில் யான் ஆங்கிலக் கலாசாலையில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் எனக்குத் தமிழாசிரியராயிருந்த நற்றிணை உரையாசிரியர் காலஞ்சென்ற பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் அவர்கள் தாம் சில ஊர்களில் பார்த்த கல்வெட்டுக்களையும் அவற்றால் அறியப்படும் சோழமன்னர்கள் அரசியல் தலைவர்கள் தமிழ்ப் புலவர் வரலாறுகளையும் அடிக்கடி தமிழ் வகுப்புக்களில் எடுத்துக்கூறி அக்கல்வெட்டுக்களின் அருமை பெருமைகளையும் உணர்த்திச் சொல்வதுண்டு. அக்கால முதல் கோயில்களிலுள்ள கல்வெட்டுக்களைப் படித்தறிய வேண்டும் என்ற விருப்பமும் தமிழ் வேந்தர் வரலாறு களை உணரவேண்டும் என்ற ஆர்வமும் என் உள்ளத்தில் மிகுந்து கொண்டே வந்தன. அந்நாட்களில் காலஞ் சென்ற கோபிநாதராயர் அவர்கள் M. A., எழுதிய சோழ வம்ச சரித்திரச் சுருக்கம் என்ற நூல் ஒன்று மதுரைத் தமிழ்ச் சங்கத்தாரால் அச்சிடப்பட்டு வெளிவந்தது. யான் கல்வெட்டுக்களைப் படித்துப் படி எடுக்கும் பயிற்சி யில் ஈடுபட்டிருந்தபோது, அவற்றை ஆராய்ச்சி செய்து உண்மையுணர்தற்கு அந்நூல் பெரிதும் உதவியது என லாம், பிறது. கல்வெட்டுக்களையும் அரசாங்கக் கல்வெட் டிலாகா ஆண்டறிக்கைகளையும் தமிழ் நூல்களையும் ஆராய்ந்து யான் கண்ட வரலாற்றுண்மைகளை 1914ஆம் ஆண்டு முதல் மதுரைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடாகிய செந்தமிழில் வெளியிட்டுவந்தேன். அங்ஙனம் வெளிவந்தவற்றுள் சோழன் கரிகாலன், சோழன் செங்கணான், அதிகமான் நெடுமானஞ்சி, திருவைகாவூர்க் கல்வெட்டுக்கள், கல்லாடமும் அதன் காலமும், முதல் கண்டராதித்த சோழர், உலாக்கொண்ட மூன்று சோழ மன்னர்கள், கல்வெட்டுக்களால் அறியப்படும் சில தமிழ்ப் புலவர்கள் முதலியவை குறிப்பிடத்தக்கனவாகும்.