பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/15

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

xiv

கூறினார்கள். யான் பல ஆண்டுகளாக வரலாற்றாராய்ச்சியில் பழகியிருத்தலையும் இரண்டு சரித்திர நூல்களும் பல ஆராய்ச்சிக் கட்டுரைகளும் எழுதி வெளியிட்டிருத்தலையும் தெரிவித்து அவர்களது உடன்பாட்டைப்பெற்று எழுதத் தொடங்கினேன்.

கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இடைக்கால முதல் பதின்மூன்றாம் நூற்றாண்டின் இறுதி வரையில் சோழ இராச்சியத்தில் அரசாண்ட சோழ மன்னர்களின் வரலாற்றை ஆராய்ந்து இரண்டு பகுதிகளாக எழுதி முடித்தேன். அவற்றுள், முதற்பகுதி, கி. பி. 846 முதல் 1070 வரையில் ஆட்சிபுரிந்தோரின் வரலாற்றைத் தன்னகத்துக்கொண்டது; இரண்டாம் பகுதி கி. பி. 1070 முதல் 1279 வரையில் அரசாண்டவர்களின் வரலாற்றைத் தன் பாற்கொண்டது. இவ்விரு காலப்பகுதியிலும் ஆட்சி புரிந்தவர்கள், கடைச்சங்ககாலத்துச் சோழ மன்னர்கட்குச் சற்றேறக்குறைய அறுநூறு ஆண்டிற்குப் பிற்பட்டவர்களாய் அவர்கள் வழியில் தோன்றியவர்களாதலின் இவ்வரலாற்று நூலுக்குப் 'பிற்காலச் சோழர் சரித்திரம்' என்று பெயரிடப்பட்டது. இச்சரித்திர நூலின் மூன்றாம் பகுதியாகச் சோழ அரசர்களின் அரசியல் முறை, அக்காலத்துக் கல்வி, கைத்தொழில், வாணிகம், நாணயம், சமய நிலை, படை, நாகரிகம், மக்களது செல்வ நிலை ஆகியவற்றை எழுதவேண்டும் என்ற எண்ணமுடையவனா யிருந்தேன். இடையில் தமிழ் இலக்கிய வரலாறு எழுதுமாறு துணைவேந்தரின் ஆணை கிடைத்தமையால் மூன்றாம் பகுதியைப்பற்றிய ஆராய்ச்சி தொடங்கப் பெறவில்லை. இனி, திருவருள் கூட்டுமேல் அதுவும் நிறைவேறும் என்பது என் கருத்து.

இச்சரித நூல் எழுதுவதற்கு யான் ஆதாரமாகக் கொண்ட நூல்கள் பலவாகும். அவற்றையெல்லாம் ஆங்காங்குக் கீழ்க்குறிப்பில் எடுத்துக்காட்டியுள்ளேன். அவற்றுள் கல்வெட்டிலாகா அறிஞர்கள் வெளியிட்டுள்ள கல்வெட்டுப் புத்தகங்களும் ஆண்டு அறிக்கைகளும்[1] திரு. K. A. நீலகண்ட சாஸ்திரியார் அவர்கள், M. A.,


  1. நம் நாட்டுப் பழைய வரலாறுகளையறிதற்குப் பேருதவியாக இருந்துவரும் தென்னிந்தியக் கல்வெட்டு ஆண்டறிக்கை வெளியிடும் செயலை இந்திய அரசியலார் நிறுத்திவிட்டனர். இச்செயல் பெரிதும் வருந்துதற்குரியதாகும்.