பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௨

பிற்காலச் சோழர் சரித்திரம்


முதல் அதிகாரம்

சோழரின் தொன்மை



டவேங்கடம் தென்குமரிக்கு இடையிலுள்ள நிலப் பரப்பு முற்காலத்தே தமிழகம்[1] என்று வழங்கப்பெற்றது. இப்போது இதனைத் தமிழ் நாடு என்றே யாவரும் கூறி வருகின்றனர். இதனைக் குடபுலம், குணபுலம், தென்புலம் என்ற மூன்று பகுதிகளாகப்[2] பிரித்துப் பண்டைக்காலமுதல் ஆட்சி புரிந்து வந்தோர், சேர, சோழ, பாண்டியர் என்னும் தமிழ் மூவேந்தரேயாவர். இவர்கள் ஆட்சிபுரிந்த பகுதிகள் முறையே சேரமண்டலம், சோழமண்டலம், பாண்டி மண்டலம் எனப்படும். இவர்கள் ஆசிரியர் தொல்காப்பியனார் காலத்திற்கு முன்னரே இத்தமிழ் நாட்டில் அரசாண்டு வந்தனர் என்பது ‘வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு[3] ’ எனவும், 'போந்தை வேம்பே ஆரெனவரூஉம்-மாபெருந் தானையர்[4] ’ எனவும் போதரும் தொல்காப்பியச் சூத்திரங்களால் நன்கு பெறப்படுகின்றது. இம் மூவேந்தருள் இடையிலுள்ள சோழரின் வரலாறே ஈண்டு ஆராயப் பெறுவது.

இனி, சோழர் என்பார் நம் தமிழகத்தின் கீழ்ப்பகுதி யாகிய சோழமண்டலத்தைத் தொன்றுதொட்டு ஆட்சி


  1. ‘இமிழ்கடல் வரைப்பில் தமிழகம்' - சிலப்பதிகாரம். அரங். வரி 37.
  2. சிறுபாணாற்றுப்படை -- வரிகள் 47, 63, 79.
  3. தொல். பொருள். செய்யுளியல் சூ. 79.
  4. தொல். பொருள். புறத்திணையியல், சூ. 5.