பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மூன்றாம் அதிகாரம்
சோழன் விசயாலயன் கி. பி. 846-881

சோழர் பேரரசை நிறுவ முதலில் அடிகோலியவன் கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இடையில் எழுந்த விசயாலயன் என்னும் சோழ மன்னனே யாவான். இவன் தஞ்சைமா நகரைக் கைப்பற்றி அதனைத் தன் தலை நகராக வைத்துக்கொண்டனன் என்று திருவாலங்காட்டுச் செப்பேடுகள் 1 உணர்த்துகின்றன. நகரத்திற்கு இன்றியமையாத எல்லா நலங்களுடன் தஞ்சாபுரி என்னும் மா நகரை விசயாலய சோழன் புதிதாக அமைத்தான் என்று கன்னியா குமரிக் கல்வெட்டு 2 க் கூறுகின்றது. விசயாலயன் காலத்திற்குப் பல ஆண்டுகளுக்கு முன்னரே தஞ்சைமா நகர் சிறப்புடன் இருந்தது என்பது கி. பி. எட்டாம் நூற்றாண்டில் பொறிக்கப்பெற்ற செந்தலைக் கல்வெட்டுக்களால்3 புலனாகின்றது. ஆகவே தஞ்சாவூரை விசயாலயன் புதிதாக அமைத்தான் என்று கன்னியாகுமரிக் கல்வெட்டு உரைப்பது பொருத்தமில் கூற்றேயாம். எனவே இவ்வேந்தன் அதனைப் பிறரிடமிருந்து கைப்பற்றினான் என்று திருவாலங்காட்டுச் செப்பேடுகள் கூறுவது வலியுறுதல் காண்க 4.

இனி, விசயாலயன் என்பான் யாவன்? இவனுக்கும் பண்டைச் சோழமன்னர்க்குமுள்ள தொடர்பு யாது?


1. S. 1. I., Vol III, No. 205. 2. Epigraphia Indica, Vol. XVIII, No. 4. 3. Ibid, Vol, XIII, pp. 142 and 144. 4. திருக்கோவலூர்த் தாலூகா வீரசோழபுரத்தில் வீரக்கல் ஒன்றில் வரையப்பெற்றுள்ள ' தஞ்சைகொண்ட கோப்பர கேசரிவர்மற்கு' என்று தொடங்கும் கல்வெட்டு இவ் வுண்மையை விளக்குதல் அறியத்தக்கது. Annual Report on South Indian Epigraphy for 1936, Part II, Para 34.