பக்கம்:பிள்ளையார் சிரித்தார்.pdf/12

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

கொண்டிருந்தது. ஆடம்பரத்தின் அடிச்சுவட்டைக்கூட அவன் அறிந்தவனல்ல.

தகப்பனார் சம்பாதித்துக் கொண்டுவரும் நாற்பது ருபாயில், அன்றாடம் செத்துப் பிழைக்கும் அவனது அருமைத் தாய் ஒருத்தி, கையில் பொருள் இல்லாத காரணத்தால் கல்யாணமாகாமல் காத்து நிற்கும் சகோதரி பிரேமா, அருமைத் தம்பி ரவி-இத்தனை உயிர்களும் ஜீவித்தாக வேண்டும். இதுதான் அவனது குடும்ப ஜாதகம்.

நான்காவது படிவம் படிக்கும் அவன், முதல் படிவத்திலிருந்தே தனக்கு எழுத ஒரு நல்ல பேனா வாங்கித் தர வேண்டுமென்று தன் தந்தையைப் பல முறை கெஞ்சியிருக்கிறான். ஆனால், அவனது ஆசை இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை. பிள்ளையின் ஆசையைப் பூர்த்தி செய்ய முடியவில்லையே என மனமுடைந்து, தந்தை வடிக்கும் சோகக் கண்ணிர்தான் அவன் கண்ட பலன்.

சர்க்கார் தயவில் இலவசக் கல்வி கற்கும் ராஜாவுக்கு ஆழ்ந்த அறிவை மட்டும் அளித்திருந்தார் கடவுள். 'போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து' என்ற தன் வகுப்புத் தமிழ் வாத்தியாரின் வார்த்தைகளை அடிக்கடி தனக்குச் சாதகமாக்கிக்கொண்டு ஆறுதல் அடைவது அவன் வழக்கம். ஆனால் இன்று, அத்தனை நாள் அவன் உள்ளத்தில் புதைந்து கிடந்த பேனாப் பைத்தியத்தை, பள்ளிச் சுவரில், நேற்றிரவு எவனோ ஒருவன் ஒட்டிவிட்டுச் சென்ற விளம்பரம், பலமாகக் கிளப்பி விட்டுவிட்டது.

அன்று முழுவதும் வகுப்பில் அவனுக்குப் புத்தியே செல்லவில்லை. அவன் சிந்தனை முழுவதும் சுவரொட்டியிலே காணும் அழகிய பேனாவையே சுற்றியவண்ணம் இருந்தது. பள்ளி விட்டதும் நடைப்பிணம் போல் வீட்டை நோக்கி வந்துகொண்டிருந்தான். வெள்ளி