பக்கம்:பிள்ளையார் சிரித்தார்.pdf/28

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

"பாவிப்பய மவனே! பொளுது ஒருபக்கம்-விடியுங்காட்டியுமா உனக்கு முட்டாய்க் கேக்குது? உருப்படாக்களுதே...போணிகூட ஆவாமெ, யாரெக் கேட்டுக்கிட்டு உன் தரித்திரம் பிடிச்ச கையை...?" என்றவன், வார்த்தைகளைக்கூட முடிக்கவில்லை. எட்டி ஒர் உதைவிட்டான்.

குழந்தை பத்தடி தூரத்தில் 'வீல்' என்று அலறிய வண்ணம் போய் விழுந்தது.

"ஐயோ! பாவி..! புள்ளெயெக் கொன்னுப் புட்டியே... " என்று அலறிப் புடைத்துக்கொண்டு ஒடிய மாரியம்மாள், குழந்தையை எடுத்து மார்போடு அணைத்துக் கொண்டாள்.

கோபத்துடனேயே கையைக் கழுவிவிட்டு, சட்டையை எடுத்துப் போட்டுக்கொண்டு புறப்பட்டு விட்டான்.

மாரியம்மாள் இறுதிவரை வாயே திறக்கவில்லை. அவளுக்குத் தெரியும் அவனுடைய குணம். கோபம் அடங்கிய பிறகு ஒன்றுக்குப் பத்தாக வட்டியும் முதலுமாக அவனை மண்டியிட வைக்கும் சாமர்த்தியம் அவளுக்கு உண்டு.

ஆகவே, இது விட்டுப் பிடிக்க வேண்டிய சமயம். வாயைத் திறக்காமல் தட்டைத் தூக்கி அவன் தலைமேல் வைத்தாள். கண்களால் விடை பெற்றுக்கொண்டு அவனும் போய்விட்டான், பள்ளிக்கூடத்தை நோக்கி.

அன்று திலகர் பள்ளி திமிலோகப்பட்டது. பள்ளி நிர்வாகிகள் சுதந்தர தினத்தை விமரிசையாகக் கொண்டாடத் திட்டமிட்டிருந்தார்கள். காலையிலிருந்தே பள்ளி மாணவர்களும், பொது மக்களுமாக வந்து கூடியவண்ணமிருந்தனர். அன்றைய நிகழ்ச்சிக்குக் கல்வி மந்திரி வேறு தலைமை வகிப்பதாக ஏற்பாடாகி இருந்ததால் கூட்டத்திற்கும், போலீஸ் கெடுபிடிக்கும் கேட்க வேண்டுமா?