பக்கம்:பிள்ளையார் சிரித்தார்.pdf/29

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

27

சாலையின் இருமருங்கிலும் மொய்த்துக் கொண்டிருந்த பலூன் வியாபாரிகளையும், ஐஸ்கிரீம் வண்டிகளையும், மிட்டாய்க்காரர்களையும், அந்த நடைபாதையை விட்டுப் போகும்படி போலீஸார் மாறிமாறி விரட்டிய வண்ணமிருந்தனர். ஆனால், பலாப்பழத்தை விட்டு ஈயை யாரால் துரத்த முடியும் ?

பள்ளிக் குழந்தைகள் கூடியிருக்கும் அந்த இடத்தை விட்டு வேறு இடத்திற்குச் செல்ல, அந்த ருசி கண்ட வியாபாரிகளுக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது? வெப்புத் தொப்பி வேறு பக்கம் சென்றதும் பழையபடி அங்கேயே கடையை விரித்துவிடுவார்கள்!

இப்படிச் செய்தால் போலீஸ்க்கு மட்டும் ரோசம் வராதா என்ன? மந்திரி வருகிற சமயம் நெருங்கவுமே, ‚377 எங்கிருந்தோ பாய்ந்துகொண்டு வந்தான். பாவாடையின் மிட்டாய்த் தட்டு 377-இன் கையிலிருந்த 'லத்தி'க்கு இரையாகி, துள்ளிப் போய் நடுத்தெருவில் சென்று விழுந்தது.

கணநேரம் பாவாடை அப்படியே கதி கலங்கிப் போய் நின்றுவிட்டான். உருப்படியாக இருந்த ஒன்றிரண்டு மிட்டாய்களைக்கூடப் பொறுக்கி எடுக்க வழியின்றி, வேகமாக வந்த லாரி ஒன்று அரைத்துக்கொண்டு போய்விட்டது.

தட்டும் மடியும் காலியாக இருந்தாலும், துக்கம் நிாம்பிய மனத்துடன் பாவாடை திரும்பினான், வீட்டை நோக்கி. . ஆமாம்! காலையில் அந்தப் பச்சைப்பிள்ளை ஒரு மிட்டாயை எடுத்துச் சுவைத்ததற்காக, அவன்படுத்திய கொடுமைக்குத் தெய்வம் அவனைச் சரியாகப் பழிவாங்கி விட்டது. ஒரணுவிற்குக்கூட விற்கவில்லையே!