பக்கம்:பிள்ளையார் சிரித்தார்.pdf/38

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

ஆனால், உலகத்தில், மனிதர்கள் போடுகிற திட்டப்படியே எல்லாம் நடந்துவிடுகின்றனவா? இல்லையே?

கார்த்திகேயன் கனவு நனவாவதற்குப் பெரும் தடையாக, சேகருடைய கல்லூரி அட்மிஷன் வந்து நின்றது.

எத்தனையோ கல்லூரிகளில் முயன்றும் இடம் கிடைக்கவில்லை. கடைசியாக வாக்களித்திருந்த ஒரு கல்லூரியின் காரியதரிசியும் இறுதியில் கையை விரித்தார்.

அந்த அதிர்ச்சியுடனேயே, இன்னது செய்வது என்று புரியாமல், தள்ளாடியபடியே மகனோடு கல்லூரிக் காம்பவுண்டைக் கடந்து சிறிது தூரம் வந்த கார்த்திகேயன் கீழே விழுந்துவிட்டார்.

இதற்குள், "என்னா....என்னா.." என்று அங்கே ஒரு சிறிய கூட்டமே கூடிவிட்டது.

சட்டென்று, அருகில் வந்த டாக்சியை நிறுத்திய பாதிரியார் ஒருவர்,சேகரின் மூலம் விஷயமறிந்து, அவனையும் அவன் தந்தையையும் ஏற்றிக்கொண்டு ஓர் ஓட்டலுக்குச் சென்றார்.

திரவமாக உள்ளே சற்று இறங்கியதும் பிள்ளை விழிகளைத் திறந்து பார்த்தார். கைகளைக் கூப்பினார்.

பாதிரியார் அவருக்கு ஆறுதல் கூறினார். பிறகு, அவர்கள் போய் வந்த அந்தக் கல்லூரி பிரின்ஸிபால் தமக்கு மிகவும் நெருங்கிய நண்பர் என்றும், சேகரின் அட்மிஷனுக்குத் தாம் ஒரு சிபாரிசுக் கடிதம் கொடுப்பதாகவும் கூறி, உடனே அந்தக் கடிதத்துடன் தவறாமல் மறுநாளே போய்ப் பிரின்ஸிபாலைப் பார்க்கும்படி சேகரிடம் கூறினார்.