பக்கம்:பிள்ளையார் சிரித்தார்.pdf/54

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

"என்ன.....?" ஸ்திரீயின் விழிகள் வியப்பால் விரிந்தன.

"ஆமாம்; உங்கள் மகளிடம் கலையும் நடிப்பும் கொஞ்சி விளையாடுகின்றன. அவை அவளிடம் இயற்கையிலேயே அமைந்துவிட்டன. பெரிய கலைஞருடைய பெண் என்பதை நிரூபித்துவிட்டாள். இனி இவள் கலைக்குத்தான் சொந்தம். எப்படியோ இவள் மட்டும் இங்கு வந்து சேராவிட்டால் இன்று எங்கள் படமே முடிந்திருக்காது! இந்தாருங்கள், உங்கள் பெண்ணினுடைய இன்றைய நடிப்பிற்காக" என்று கூறி, ஆயிரம் ரூபாயைத் தூக்கி அந்த ஸ்திரீயிடம் கொடுத்தார்.

"பிறகு நான் இவளைப் பட்டணத்துக்கு அழைத்துப் போய், இன்னும் நிறையப் படங்களில் நடிக்க வைக்கப் போகிறேன். நீங்களும் வந்துவிடுங்கள். இனிமேல் உங்கள் குடும்பம் இவளால் பிரகாசமடையும், மறுக்காதீர்கள்!" என்று கூறினார் டைரக்டர்.

அந்த ஸ்திரீ மறுக்கவில்லை.

ஆம். ஏன் மறுக்க வேண்டும்? கண்ணனது லீலைகளை அறிய வல்லவர் யார்?