பக்கம்:பிள்ளையார் சிரித்தார்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

"ஆம், உன்னுடைய சிநேகிதர்கள் கூறியதுதான் சரி. தொழில் என்றால், அதில் லாபமும் இருக்கும், நஷ்டமும் இருக்கும். லாபமில்லாமலே, நஷ்டமும் சில சமயம் ஏற்படும். இந்த இரண்டையும் ஏற்க வலிமையுள்ளவன் தான் முதலாளி" என்று சிரித்தபடியே கூறிக்கொண்டு ஒரு பெரும் தொகைக்கான செக்கைக் கிழித்து வாசுவின் கையில் கொடுத்தார்.

அதை வாங்கிப் பார்த்த வாசுவின் விழிகள் ஆச்சரியத்தால் மலர்ந்தன. ஆம்!–

அதில், எல்லோருக்கும் வழக்கத்தைவிட அதிகமான போனசுக்குப் பணம் இருந்தது. வாசுவின் இமைகள் நன்றிப் பெருக்கால் நனைந்தன.

இப்படித் தங்கமான ஒரு முதலாளியையும், அவரது தொழிலையும் போற்றி, உண்மையோடு உழைக்கத் தயாராக இருக்கும் விசுவாசமுள்ள தொழிலாளர்களையும் கொண்ட மேனகா மில்லை ஒரு ஸ்தாபனம் என்பதைவிடச் சிறப்பு மிக்கதொரு குடும்பம் என்றே அழைக்கலாம் அல்லவா?