பக்கம்:பிள்ளையார் சிரித்தார்.pdf/7

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

5

இறுதியாகத் தனபாலன், ஒரு புதுத் தந்திரத்துடன் சர்மாவின் வீட்டை அடைந்தான். அதாவது, தனபாலன் முன்னதாகவே தன் கைப்பணம் ஆயிரம் ரூபாயைக் கொண்டுபோய்ச் சர்மாவிடம் கொடுத்து விட்டு, "உமக்கு நாளைப் புதன்கிழமை என்ன கிடைக்கிறதோ, அதை நீர் அப்படியே என்னிடம் கொடுத்துவிட வேண்டும்!" என்று ஒரு நிபந்தனை மட்டும் போட்டான்.

இதைக் கேட்ட சர்மா சிரித்தார். "தனபாலா! அன்று அப்படி எனக்கென்ன அதிர்ஷ்டம் அடித்துவிடப் போகிறது? அப்படி அடித்தாலும் அரைப்படிக்கு ஒரு படி அரிசி கிடைக்கலாம். இல்லாவிட்டால் என்னை மாத்திரம் சில நாள் சாப்பிடக் கூப்பிடும் பண்ணையார் அன்று, 'நீங்கள் உங்கள் குடும்பத்துடன் வந்து போஜனம் செய்ய வேண்டும்’ என்று அழைக்கலாம்; இரண்டு வாழைக்காய்களுக்கு நான்கு வாழைக்காய்களாக உபாதானம் கிடைக்கலாம். இவற்றை எல்லாம் நம்பி நீங்கள் ஏன் அநாவசியமாக ஆயிரம் ரூபாயைத் துாக்கி எனக்குக் கொடுத்து நஷ்டப்பட வேண்டும்?" என்றார் சர்மா, சூதுவாது அறியாமல்.

ஆனால் தனபாலன் அதை லட்சியமே செய்யவில்லை. அவன் தேவ ரகசியத்தை அறிந்தவனல்லவா? துணிந்து சொன்னான். உமக்கு அதைப்பற்றி என்ன? கிடைத்தால் கிடைத்ததைக் கொடுத்துவிடும். இல்லாவிட்டால் இந்த ஆயிரம் ரூபாயையும் நீர் எடுத்துக்கொண்டுவிடும்" என்றான். தெய்வ வாக்கு ஒரு காலும் பொய்யாகாது என்கிற தைரியம் அவனுக்கு!

குறிப்பிட்ட புதன்கிழமையும் வந்தது. சர்மாவைத் தனபாலன் காலையிலேயே வந்து எச்சரித்துவிட்டான். இன்று நீர் சற்று நிதானமாகக் கவனமாகக் கண்ணைத் திறந்துபடியே தெருவில் நடந்து செல்லும். கீழே ஏதாவ்து துணிமூட்டைபோல் கிடந்தால், ஆசாரத்தை எண்ணி, அதை அலட்சியமாக விலக்கிவிட்டு வந்துவிட