பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/13

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா. சீனிவாசன்

11



அவ்வூர் மகளிர் தம் கூந்தலுக்கு ஊட்டிய அகில்புகை வான்முகிலில் கலந்து அது பெய்யும் மழை நீருக்கு அம் மணத்தைச் சேர்ப்பித்தது. அந்த ஊரில் பெய்த மழை நீரும் அகில் மனம் வீசியது.

மக்கள் கல்வியும், ஞானமும் மிக்கவராய் வாழ்ந்தனர். கந்தனை அனையவர் கலை தெரி கழகங்களாக அவர்கள் பயிலும் கல்வி நிலையங்கள் காட்சி அளித்தன. புலவர்கள் நூல்களை ஆராய்ந்தனர். கவிஞர்கள் கவிதைகள் இயற்றினர். அரங்கேற்றங்கள் நடைபெற்றன.

ஆடல் மகளிர் மேடைகளில் காட்சி அளித்தனர். அவர்கள் இடை’ கவர்ச்சி தந்தது. கண்புலனுக்குத் தெரியாத கவின் அது பெற்றிருந்தது. எங்கும் இசை முழங்கியது; முத்தமிழ் வளர்த்த வித்தகர்கள் கலையையும், ஞானத்தையும் வளர்த்தனர். அறிவுமிக்க சான்றோர்கள் வாழ்ந்ததால் மக்கள் கவலை இன்றி வாழ்ந்தனர்.

ஒழுக்கம் விழுப்பம் தரலான், அதனை உயிரினும் மேலானதாக மதித்தனர். நேர்மை தவறாது வாழ்ந்தனர். சோர்வும், சோம்பலும் அவர்களிடம் தலை காட்டவே இல்லை. ஆண்மை மிக்கவராகத் திகழ்ந்தனர். விற் பயிற்சியும், படைக்கலப் பயிற்சியும் அவர்களைச் சிறந்த வீரர்கள் ஆக்கின. ஓடாத படையை உடையவன் நளன் என்ற புகழுக்குக் காரணம் ஆயினான்.

வறுமை இல்லை; அதனால் மக்கள் பிறர் பொருளைக் கவர விரும்பவில்லை; இரத்தல் என்பது இழிவு என்று அறிந்தவராய் வாழ்ந்தனர்; உழைத்தனர்; உயர்வு அடைந்தனர். மக்கள் அழுது அரற்றியது இல்லை; கலக்கம் என்பதும் அவர்கள் கண்டதும் இல்லை; சோர்வு, கலக்கம், அரற்றுதல் என்பனவற்றைக் காணவேண்டும் என்றால் மகளிர் கூந்தலில் சோர்வு காண முடிந்தது; கலக்கம் என்பது நீர் குடைந்தாடும் குளங்களில் காண முடிந்தது. அரற்றுதல்