பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/17

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா. சீனிவாசன்

15



தொடங்கியது. மாட்சிமை மிக்கவள் அவள் என்பதை எடுத்துக் கூறியது. அவளிடத்தில் பெண்மை அரசு புரிகிறது என்று எடுத்துக் கூறியது. அவள் நற்குணங்களை அழகிய உருவகங்களில் எடுத்துப் பேசியது.

“அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு இவை அவள்பால் காணப்படும் நற்குணங்கள். இவை அவளுக்கு நாற்படைகள் ஆகும். காற்சிலம்பு அணி முரசு, கண்கள் அவளுக்கு வேலும், வாளும் ஆகும். அவள் அழகிய முகம் அது நிலவு போன்றது; அது வெண் கொற்றக்குடை. அதன் கீழ் பெண்மை அரசு ஆள்கிறது” என்று கூறியது.

“அவள் வனப்பு மிக்கவள்” என்று கூறியது. இடை மெல்லியது; வண்டு தன் சிறகு கொண்டு வீசும் சிறு காற்றுக்கும் அவள் ஆற்றாள்; மெல்லியலாள்” எனப் பேசியது.

“அவள் செந்தேன் மொழியாள்” என்றும் கூறியது. “மன்மதனும் அவளிடம் வந்து தன் மலர் அம்புகளைத் தீட்டுவதற்கு அவள் பிறை போன்ற நெற்றியைத்தான் நாடுகிறான். அவள் அழகு மன்மதனையும் கவர்ந்து உள்ளது. அவன் தன் ஆட்சிக்கு அவளைத் துணையாக நாடுகிறான். இளைஞர்கள் அவள் பேரழகைக் கண்டு மனம் உடைவர்” என்று பேசியது.

அவனுக்கு அவள்பால் விருப்பு பெருகியது. இந்தப் பறவை எப்படித் தன் காதலை எடுத்து உரைக்கும் என்று ஏங்கினான். இருவருக்கும் உள்ள பழக்கம் எத்தகையது என்பதை அறிய விரும்பினான்.

“அன்னமே! நீ உரைத்த அன்னம் அவளைப் பற்றி எண்ணவே என் ஆவி சோர்கிறது. உனக்கும் அவளுக்கும் உள்ள நெருக்கம் யாது? பழக்கம் யாது?” என்று கேட்டான்.