பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/182

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

180

புகழேந்தி நளன் கதை




விரைகொண் டெழுந்தபிறை மேகத் திடையே
புரைகின்ற தென்னலாம் பொற்பு 195


செழுநீலம் நோக்கெறிப்பச் செங்குவளை கொய்வாள்
முழுநீலம் என்றயிர்த்து முன்னர்க்-கழுநீரைக்
கொய்யாது போவாளைக் கோல்வளைக்குக் காட்டினான்
வையாரும் வேற்றடக்கை மன் 196


காவி பொருநெடுங்கண் காதலியும் காதலனும்
வாவியும் ஆறும் குடைந்தாடித்-தேவின்
கழியாத சிந்தையுடன் கங்கை நதிஆடி
ஒழியா துறைந்தார் உவந்து 197

ஊடல் கொள்ளுதல்

நறையொழுக வண்டுறையும் நன்னகர்வாய் நாங்கள்
உறையும் இளமரக்கா ஒக்கும்-இறைவளைக்கைச்
சிற்றிடையாய் பேரல்குல் தேமொழியாய் மென்முறுவல்
பொற்றொடியாய் மற்றிப் பொழில் 198


கன்னியர்தம் வேட்கையே போலும் களிமழலை
தன்மணிவாய் உள்ளே தடுமாற-மன்னவனே
இக்கடிகா நீங்கள் உறையும் இளமரக்கா
ஒக்குமதோ என்றாள் உயிர்த்து 199


தொண்டைக் கனிவாய் துடிப்பச் சுடர்நுதல்மேல்
வெண்தரளம் என்ன வியர்வரும்பக்-கெண்டைக்
கடைசிவப்ப நின்றாள் கழல்மன்னர் வெள்ளைக்
குடைசிவப்ப நின்றான் கொடி 200


தங்கள் புலவித் தலையில் தனித்திருந்த
மங்கை வதன மணியரங்கில்-அங்கண்
வடிவாள்மேற் கால்வளைத்து வார்புருவம் என்னும்
கொடியாடக் கண்டானோர் கூத்து 201