பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/33

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா. சீனிவாசன்

31



புறப்படக் கால் அடி எடுத்து வைத்தான். ‘ஆனால் ஒன்று; நீ மட்டும் வராமல் நின்று விடாதே’ என்று கூறி அனுப்பினாள்.

அவள் மனக் கருத்தை அவன் அறிந்து கொண்டான். தேவர்களைப் பொறுத்தவரை அவள் பேசியது வன் மொழியாக இருந்தது. தன்னைப் பற்றி அவள் பேசியது மென் மொழியாக இருந்தது. கடமையை முடித்து விட்டோம் என்பதில் மனநிறைவு கொண்டான். காதலி யுடன் பேசினோம் என்பதில் களி மகிழ்வு கொண்டான்.

தம்முடைய காதலை இனி யாரும் தடுக்க முடியாது. தேவர்களாலும் அசைக்க இயலாது; மூவர் வந்து முயற்சித் தாலும் முறியாது என்று அறிந்தான். மனத் திண்மையோடு திரும்பினான்.

நெஞ்சில் நேர்மைத் திறம் இன்றி வஞ்சனை செய்தார்கள் தேவர்கள்; அவர்களைக் கண்டு இனி அஞ்சத் தேவையில்லை என்று தெளிவு பெற்றான். தேர்வில் தனக்குத்தான் வெற்றி என்பது அறிந்தான்.

தேவர் தலைவர்கள் நால்வரும் இவன் கொண்டு வரும் செய்திக்காகக் காத்து இருந்தனர்.

தான் அவளிடம் பேசிய பேச்சுரையையும், மெலிதாக எடுத்துச் சொல்லி ஏற்குமாறு தான் கூறியதையும் அகரம் முதல் னகர இறுவாய் ஒன்றுவிடாமல் கூறினான்.

அவள் ஒளிவு மறைவு இன்றி மறுத்துவிட்ட செய்தியை எடுத்துக் கூறினான். தன்னையும் சுயம்வர மண்டபத்துக்கு வருமாறு அவள் கூறிய செய்தியையும் ஒளிவு மறைவு இன்றி எடுத்துக் கூறினான்.

வாய்மை தவறாத வேந்தன் அவன் என்பதைக் கண்டு அறிந்தனர். அவனை மதித்தனர்; பாராட்டினர்; நன்றி தெரிவித்தனர்.