பக்கம்:புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்.pdf/118

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புகழ்பெற்ற புதுக் கவிஞர்கள்116

சிற்றூரும், வரப்பெடுத்த வயலும், ஆறு
தேக்கியநல் வாய்க்காலும், வகைப் படுத்தி
நெற்சேர உழுதுழுது பயன்வி ளைக்கும்
நிறையுழைப்புத் தோள்களெலாம் எவரின் தோள்கள்?
கற்பிளந்து மலைபிளந்து கனிகள் வெட்டிக்
கருவியெலாம் செய்துதந்த கைதான் யார்கை?
பொற்றுகளைக் கடல்முத்தை மணிக்கு லத்தைப்
போயெடுக்க அடக்கியமூச் செவரின் மூச்சு?

முதலில் இருக்கும் பாட்டுவரிகளுக்குச் சொந்தக்காரர் பெர்ட்டோல்ட் ப்ரெக்ட் என்னும் ஜெர்மானியப் பாரதிதாசன். உலகின் தலைவிதியையே மாற்றிவைத்த உலகப்போர்கள் நடந்த காலத்தில், ஜெர்மனியில் சமாதானச் சங்கநாதம் முழக்கிய புரட்சிக்கவி; குண்டு மழைகளுக்கு நடுவிலிருந்து மனிதாபிமானக் குரல் கொடுத்த ஒற்றைக்குயில்.

ப்ரெக்ட் 1898 ஆம் ஆண்டு ஆக்ஸ்பர்க் நகரில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தார். தந்தை சிறிய காகித ஆலையொன்றின் நிர்வாக இயக்குநர்; தாயார் பிளேக்ஃபாரஸ்ட் பகுதியில் பணிரிந்த ஓர் அரசாங்க அலுவலரின் மகள். முதல் உலகப்போர் தோடங்கியபோது, ப்ரெக்ட் மாணவராக இருந்தார். அப்போதே அவர் துணிச்சலாகப் போர் எதிர்ப்புக் கொள்கைகளை வெளியிட்டார். மியூனிச் பல்கலைக் கழகத்தில் படித்த காலத்தில் பல்கலைக் கழக மரபுகளுக்கு மாறான பணிகளில் ஈடுபட்டதோடு, ஒரே சமயத்தில் பலபெண்களைக் காதலிக்கும் வழக்கத்தையும் மேற்கொண்டிருந்தார். இவ்வழக்கம் அவர் வாழ்நாளில் இறுதிவரை தொடர்ந்தது.

கல்வியை முடித்துக் கொண்டு, ஜெர்மன் இராணுவ மருத்துவமனையில் சிலகாலம் பணிபுரிந்தார். முதல் உலகப் போர் முடிவுற்றதும் இராணுவப் பணியிலிருந்து விலகி பவேரியப் பொதுவுடைமைப் புரட்சியில் பங்கு கொண்டார். அங்கு பொழுது போக்கு அரங்குகளிலும், விடுதிகளிலும் நாடோடிப் பாடகராகச் சிலகாலம் புகழ்பெற்றார். அன்றையப் பிற்போக்கு நாடகங்களைத் தாக்கிப் பத்திரிகைகளில் விமரிசனம் எழுதினார். பின்னர் இவரே நாடகம் எழுதிப் புகழ் பெறத் தொடங்கினார். 1924 முதல் 1933 வரை பெர்லின் நாடக உலகில் துடிப்போடு இயங்கினார். சிறந்த இசைப் புலவரான 'குர்த்வீல்' என்பாரின் துணையோடு ‘மூன்று பென்னிய இசைநாடகம்’ (The Three Penny Opera) என்ற சிறந்த படைப்பை வெளியிட்டார். அந்நாடகம் பெர்லினில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ஜெர்மனியிலும் மற்ற ஐரோப்பிய நாடுகளிலும் அது எல்லாராலும் விரும்பி நடிக்கப்பட்டது.

1933-இல் ரீச்ஸ்டாக் என்ற இடத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்குப் பின், இவர் ஜெர்மனியை விட்டு வெளியேறி