பக்கம்:புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்.pdf/31

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

29முருகு சுந்தரம்

விட்டது. வெர்லேனுடைய கவிதைப் பணியிலும் சரிவு ஏற்பட்டது.

தனது பத்தொன்பதாம் வயதில் கவிதை எழுதுவதை விட்டுவிட்டு, ஐரோப்பாவிலும் மத்தியக் கிழக்கு நாடுகளிலும், ஆப்பிரிக்காவிலும் சுற்றியலைந்தான். அப்போது பிழைப்புக்காக அவன் மேற்கொண்ட பணிகள் பல. கொஞ்சநாள் இசைப்பயிற்சியும், பிறமொழிப் பயிற்சியும் மேற்கொண்டான்; டச்சுக் காலனிப் படையில் சேர்ந்து சிலகாலம் பணி புரிந்தான். சைப்ரசில் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்தான். கடைசியில் அபிசீனியாவில் ‘அராரே’ என்ற இடத்தில் நிலையாகத் தங்கி காஃபி, கள்ளத்துப்பாக்கி, யானைத் தந்தம் முதலியவற்றை விற்பனை செய்ததோடு, நீக்ரோ அடிமைகளையும் பிரெஞ்சு வணிகர்களுக்கு விற்பனை செய்தான். இங்கு வாழ்ந்த சமயத்தில் இவன் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

1891-ஆம் ஆண்டில் முழங்காலில் புற்றுநோய் ஏற்பட்டு, அதற்கு மருத்துவம் செய்து கொள்வதற்காக பிரான்சு திரும்பினான். மார்சேல்ஸ் மருத்துவமனையொன்றில் கால் துண்டிக்கப்பட்டு இறந்தான். அப்போது-அவனுக்கு வயது முப்பத்தேழு. தங்களிடையே உறவு முறிந்த நிலையிலும், வெர்லேன் ரெம்போவினுடைய கவிதைகளைத் திரட்டி ஒழுங்கு செய்தார். ரெம்போ இறப்பதற்கு ஓராண்டுக்குமுன், வெர்லேன் அராரேவுக்குக் கடிதம் எழுதி, ஏதாவது புதிய கவிதைகள் எழுதியிருந்தால் அனுப்பிவைக்கும்படி ரெம்போவைக் கேட்டுக் கொண்டார். அதற்கு ரெம்போ, அந்தக் குப்பையை நான் தீண்டுவது கூட இல்லை’ என்று பதில் எழுதியிருந்தான். ரெம்போ இறந்தபிறகே அவன் கவிதைகள் முறையாகத் தொகுத்து வெளியிடப்பட்டன. அவன் வாழ்கையைப் பற்றியும், கவிதைப் பணிபற்றியும் பல கற்பனைகளும் கட்டுக் கதைகளும் பரவலாக வழங்குகின்றன.

ஒரு முறை பிரெஞ்சு நாட்டின் பெருங் கவிஞரும் நாவலாசிரியருமான விக்தர் ஹ்யூகோ ரெம்போவைக் ‘குழந்தை ஷேக்ஸ்பியர்’ என்று குறிப்பிட்டதாக அவனிடம் கூறிய பொழுது ‘எனக்கு இணையாக யாரையும் ஒப்பிட்டுச் சொல்ல முடியாது’ என்று பெருமிதமாகச் சொன்னானாம்.

ரெம்போ தனது இறப்புக்குப் பிறகு, தனது கவிதைகளோடு நிறையக் கடிதங்களையும் குறிப்புக்களையும் விட்டுச் சென்றிருக்கிறான். என்றாலும் மேலை நாட்டு இலக்கியவாதிகளுக்கு இவன் பெரிய புதிராகவே விளங்குகிறான். ரெம்போவின் சார்லிவில் நகரில், அவ்வூர் மக்கள் அவனுக்குச் சிலையெடுத்துச் சிறப்பித்திருக்கின்றனர்.

ரெம்போவுக்குச் சற்று முன்பு வாழ்ந்த கவிஞர் போதலேர்,