பக்கம்:புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்.pdf/58

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புகழ்பெற்ற புதுக் கவிஞர்கள்O56

பவுண்டுக்குப் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த ஆங்கிலக் கவிஞர்களின் தாக்கமும், ப்ரவென்கல் பாடகர்களின்[1] (Provencal Singers) தாக்கமும் மிக அதிகம், ஆங்கிலக் கவிஞர்களுள் பிரௌனிங்கை இவருக்கு மிகவும் பிடிக்கும். பிரெளனிங் கவிதைகளில் காணப்பட்ட கலைநுட்பம் இவரைப் பெரிதும் கவர்ந்தது. கிட்டத்தட்ட இருவருடைய கவிதை உத்திகளும் ஒன்றே.

ருசிய இலக்கியங்கள் இவரைக் கவரவில்லை. சிறந்த ருசிய எழுத்தாளர்களான தால்ஸ்தாய், தாஸ்தாவ்ஸ்கி, செக்காவ் ஆகியோரின் படைப்புக்கள் கூட பவுண்டின் நூலகத்தில் இடம்பெறவில்லை. இலண்டனில் வாழ்ந்த காலத்தில் ஆர்னாட்டேனியல், காதியர், கேவல் கேண்டி, ஹென்றி ஜேம்ஸ் ஆகியோரின் நூல்களை விரும்பிப்படித்தார்.

பவுண்டின் நட்பால் அதிகப்பயன் பெற்றவர் கவிஞர் டி. எஸ். எலியட். அவர் பவுண்டின் திறனாய்வினை ஏற்றுப் ‘பாழ்நிலம்’ என்ற தமது கவிதையைப் பாதியாகச் சுருக்கிக் கொண்டார். அதுவே அக்கவிதையின் வெற்றியாக அமைந்து அவருக்கு நோபெல் பரிசையும் தேடிக் கொடுத்தது. இந் நன்றிக்காகவே சிறந்த தொழில் வல்லுநருக்கு (the better Craftsman) என்று சொல்லி அக்கவிதையைக் பவுண்டுக்குப் படைத்திருக்கிறார். எலியட்டின் வெற்றிப் படைப்புக்களான ‘ஒரு பெண்ணின் வரலாறு’ (Portrait of a Lady), ப்ருஃப்ராக் (Prufrock) ஆகிய இரண்டுமே பவுண்டின் படைப்புக்களைப் படித்த தாக்கத்தால் உருவானவை.

சம காலக் கவிதைகளில் காணப்பட்ட மிகு புனைவியக் (Romantic Excess) கொள்கையைத் தீவிரமாக எதிர்த்த இளங்கவிஞர்களை யெல்லாம் ஒன்றுதிரட்டி ஓர் அமைப்பை நிறுவினார். மற்ற கவிஞர்களிடமிருந்து அவர்களை வேறு பிரித்துக் காட்டுவதற்காக அவர்களுக்குப் படிமக்கவிஞர்கள் (imagists) என்று பெயர் சூட்டினார். பிறகு படிமக்கவிஞர்களின் கொள்கை அறிக்கை (the manifesto of imagists) ஒன்றையும் வெளியிட்டார். அவ்வறிக்கை வருமாறு:

(1) பேச்சு வழக்குச் சொற்களும் கவிதையில் இடம் பெற வேண்டும்; கவிதைக்கு அலங்காரச் சொல்லைவிடச் சரியான சொல்லே தேவை.

(2) ஒரு கவிஞன் தனது தனித் தன்மையை மரபைவிடக் கட்டற்ற கவிதையில்தான் சிறப்பாக வெளிப்படுத்த முடியும் என்று.நம்புகிறோம். எனவே யாப்பிலக்கண அடிப்படையில்

  1. பிரெஞ்சு நாட்டில் provencal என்ற பகுதியில் வாழ்ந்த பாடகர்கள். இப்பகுதியில் வழங்கிய பிரெஞ்சு மொழிமரபுக்கு ஏற்ப எழுதப்பட்ட இவர்களுடைய நாட்டுப்பாடல்களைப் பவுண்ட் மிகவும். விரும்பிப்படித்தார். துவக்ககாலப் பவுண்டின் கவிதைகளில் இப்பாடல்களின் தாக்கம் இருந்தது.