பக்கம்:புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்.pdf/91

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

89முருகுசுந்தரம்



பெருங்காப்பியமும் தன்னுணர்வுக் கவிதையும்’ (The Epic and the Lyric in Modern Russia) என்ற தனது கட்டுரையில் கவிஞர் பாஸ்டர் நாக்கைத் தன்னுணர்வுக்கவிதையென்றும், மாயகோவ்ஸ்கியைப் பெருங்காப்பியம் என்றும் குறிப்பிட்ட ஸ்வெட்டேவா அவ்விருவரையும் ‘கவிஞருள் அதிசயிக்கத்தக்கவர்கள்’ என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

“காலங் கடந்த படைப்புக்களைப் போற்றிப் பாதுகாத்து வழிபடும், உயிரற்ற கலைப் பொருட் காட்சிச் சாலை நமக்குத் தேவையில்லை; தெருக்களிலும், வண்டிப்பாதைகளிலும், தொழிற் சாலைகளிலும், பணிமனைகளிலும், பாட்டாளிகளின் இல்லங்களிலும் காணப்படும் மனித உணர்வுகளின் உயிர்த் துடிப்பான தொழிற் கூடங்கள் தேவை” என்று மாய கோவ்ஸ்கி எழுதினான். இத்தகைய சிந்தனைகள் இளம் மாய கோவ்ஸ்கியை ஒரு சுறு சுறுப்பான அரசியல்வாதியாக உருவாக்கின. குலையை விடுதலைக்குரிய ஒரு போர்க்கருவியாக மாற்றி அடிமைத் தளையில் சிக்கித் தவித்த ஏழைகளின் கையில் கொடுக்க விரும்பினான். கலை மேட்டுக் குடியினருக்கே உரியது என்ற கனவைத் தகர்த்தெறிவதுதான் அவன் திட்டம்.

‘பழமையின் மறுமலர்ச்சியே பண்பாடு’ என்ற கொள்கையை அவன் ஒத்துக் கொள்ளவில்லை. உற்பத்திப் பெருக்கமும், மக்களுக்குப் பயன்படும் பொருள்களாக மூலப் பொருள்களை மாற்றியமைக்கும் திட்டமிட்ட தொழில் திறமையுமே பண்பாடு என்று புது விளக்கம் கொடுத்தான் மாயகோவ்ஸ்கி.

ஒளிமிக்க ஆன்மீக உலகைப் பற்றி ஓயாமல் பேசிக் கொண்டிருப்பதைக் கைவிட்டு விட்டுக் கலையானது வெட்கப்படாமல் உலகியலைப் பற்றியும், மனிதனின் அடிப்படைத் தேவைகளைப் பற்றியும் பேசவேண்டும் என்று வற்புறுத்தினான். கலை, மனித உணர்வுகளைப்பற்றியதாக இருக்க வேண்டுமே தவிர, கண்ணுக்குப் புலப்படாத ஏதோ ஒன்றைப் பற்றியதாக இருக்கக்கூடாது என்பது அவ்ன் கருத்து. மேலும், அது தனிப்பட்ட ஒரு மனிதனின் உணர்ச்சி வெளிப்பாடாக இருப்பதை விட, கொள்கைகளின் கூட்டுக் குரலாக ஒலிக்கும்போது அதன் பொருத்தம் புலப்படும் என்று சொன்னான்.

கலையைப்பற்றித் தான் வெளிப்படுத்திய கருத்துக்கள் மக்களிடையில் பரவி வேரூன்ற வேண்டுமென்றால் அவற்றை அறிக்கை மூலம் விளம்பரப்படுத்த வேண்டும் என்று கருதிய மாயகோவ்ஸ்கி 1912-இல் ‘ஜனரஞ்சகத்தின் கன்னத்தில் ஓர் அறை’ (A slap In The Face of Public Taste) என்ற ஆத்திரமூட்டும் அறிக்கையொன்றை வெளியிட்டான். ருசியர்கள் மிகவும் போற்றி மதித்த இலக்கியவாதிகளான புஷ்கின், டாஸ்டாவ்ஸ்கி, டால்ஸ்டாய் ஆகியோரைத் தமது புத்திலக்கியப் போர்க்கப்பலில் இருந்து தூக்கி எறியுமாறு