பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 புண்ணியம் ஆம் பாவம்போம்!

அப்போதுதான் அனந்தசாமியின் அறிவிலே ஒரு மின்னல் வெட்டியது. அடிகள் பற்றிய உண்மை அவனுக்குப் பளிச்சிட்டது. அந்த வேகத்தைத் தாங்கமாட்டாதவனாய் அவன் செயலற்று ஒரு மூலையில் உட்கார்ந்துவிட்டான்.

அதிகாலையில் சுற்றுவட்டாரம் விழிப்பதற்கு முன்னரே - அன்பானந்தரும் அவருடைய ராதையும் கார் ஏறிப் போய்விட்டார்கள். அவனிடம் சொல்லிக் கொள்ள அவர் சிரமப்படவில்லை. அவருக்கு நல்ல மனசு தூங்கிக் கொண்டிருப்பான், பாவம் அவனை எழுப்புவானேன்? என்று அவர் எண்ணியிருக்கலாம்.

ஆனால், அனந்தசாமி துரங்கவில்லை. அவன் அறிவும் கண்மூடவில்லை.

ஹெ ஹெ ஹெ என்று சிரித்தான் அவன். கவலையை மறக்கணுமா? சினிமாவுக்குப் போ. கூட ஒரு ஜோடியையும் கூட்டிக் கொண்டுபோ ஏஏய், என்ஜோடி எங்கே காணோம்? அன்பானந்தர் இழுத்துக் கொண்டு போய் விட்டாரா? ஆகா, அருமையான உலகம்! ஜோர் ஜோராப் கதை பண்ணு. சொகுசான பொம்பிளை உன்னைத்தேடி வருவாள். இந்த விதமாகப்புலம்ப ஆரம்பித்து விட்டான் அனந்தசாமி.

ஞானோதயம் இருக்கிறதே - அதுதான் அறிவின் விழிப்பு - அது யாரை எவ்வாறு பாதிக்கும் என்று சொல்ல முடியாதுதான்.

சித்தார்த்தனை அது புத்தனாக மாற்றியது. அப்பாவி அனந்தசாமியை ஒரு பித்தனாக மாற்றி விட்டதே!