பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் • 47

புலனாகாத தளைகளையும் வேலிகளையும் மதித்துப் போற்றி, தம் அன்றாட வாழ்வில் அனுஷ்டித்தும் பழகிப் போன அவருக்கு அவற்றை மீறிக்கொண்டோ தகர்த்தோ செயல்புரிவதற்குத் துணிச்சல் வராது, கிடையாது என்றுதான் சொல்ல வேண்டும் இது அவருக்கே நன்றாகப் பட்டிருந்தது.

ஒரு சந்தர்ப்பம் அவர் நெஞ்சை உறுத்தும் நினைவாய் அசைந்தது. ஓர் இரவு, பத்து மணிக்கு மேலிருக்கும். விநாயகமூர்த்தி அவருடைய அறையில் படித்துக் கொண்டிருந்தார். சுற்றுப்புறத்தில் இருட்டும் அமைதியும் கனத்துக்கிடந்தன. யாரோ கதவைத் தட்டும் மெல்லிய ஓசை எழுந்தது. அவர் நிதானித்தார். மீண்டும் டொக், டொக்” சத்தம் கேட்டது. அவர் எழுந்து கதவைத்திறந்தார். வெளியில் இரண்டு பெண்கள் நின்றார்கள். முதியவள் ஒருத்தி. அலங்காரங்கள் பளிச்சிடும் பகட்டுப்பாவையாக நின்ற இளையவள் ஒருத்தி. அவள் வெளிச்சத்தில் சிறிது நின்று தன்னை விளம்பரப்படுத்திய பிறகு, மற்றவளின் பின் ஒதுங்கி இருட்டில் மறைந்தாள். பெரியவள் சிரித்தாள். தனியாகத் தான் இருக்கீங்களா? தூக்கம் வரலியா? என்றாள். இளையவள் களுக்குச் சிரிப்பு உதிர்த்தாள். அவளிடமிருந்து வாசனை அலைகள் பொங்கிக் கொண்டு வந்தன. துணை வேணுமா? பொம்பிளைத் துணை இந்த சரோஜாவை சேர்த்துக் கொள்ளுங்களேன்’ என்று ரகசியக்குரலில் சொன்னாள். இரவு ராணி தாக்குதல் இப்படியும் நடக்குதா?” என்றது அவருடைய அறிவு வேண்டாம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு உள் வாங்கினார் அவர். குட்டியைப் பாருங்க. ஜம்னு இருக்கிறா என்று மூத்தவள் சொல்லவும், இளையவள் தன் கவர்ச்சி அம்சங்களை வெளிச்சமிட்டு எடுப்பாகக் காட்டி விளக்கொளியில் வந்து வசியப்போஸ் தந்து நின்றாள். “சீ போ!’ என்று சீறி விழுந்து விட்டு, கதவைச் சாத்தித் தாழிட்டார் அவர்.