பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்.pdf/53

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்

51

கட்டிடத்துள் நான் நுழைந்துவிட்டேன். நூலகத்தின் காப்பாளர் போல் தென்பட்ட இளைஞர் எழுந்து நின்று என்னை வரவேற்றார். நூலகத்துக்குள் வேறு ஓர் ஈ காக்கை இல்லை. புதிய அலமாரிகளில் அணி அணியாகப் புதுக்கருக்கழியாத நூல்கள் காட்சியளித்தன. வின்ஸ்டன் சர்ச்சிலின் போர்க்கால நினைவுகள், ஆறு தொகுதிகளும், ஏ.ஜே.கிரானின் பர்ள்பக், மேரிகாரெல்லி போன்ற புகழ்பெற்ற ஆசிரியர்களின் பல படைப்புகளும், நேருவின் டிஸ்கவரி ஆஃப் இந்தியா, எமர்ஸன் கட்டுரைகள் போன்ற நூல்களும் இடம் பெற்றிருந்தன. தமிழ்ப் பிரிவில் நூல்கள் அதிகமில்லை என்றாலும், டாக்டர் மு.வ.வின் படைப்புகள் என்னை மிகுதியாகக் கவர்ந்தன. நான் புத்தகங்களைப் பிரித்துப் பார்த்துக்கொண்டே ஊன்றியிருந்ததில் என்னுடன் வந்த தோழிகளின் நினைவே வரவில்லை. சுமார் ஒரு மணிநேரம் சென்றதும், உணர்வு வந்த நிலையில் நூலகத்தில் உறுப்பினராக ஒரு விண்ணப்பப் படிவம் பெற்றுக் கொண்டு படி இறங்கினேன். அப்போதுதான் அவர்கள் என்னைத் தேடிக் கொண்டு வந்தார்கள். “ஏய், நீ இங்கேயா இத்தனை நேரம் இருந்தாய்?” என்று வியப்புடன் வினவிய தோழி, இந்த அணைக்கட்டுத் திட்டத்துக்கு நான் வருமுன்பே நெருக்கமாகப் பழகியவள். கல்லூரிப் பட்டம் பெற்றவள். “இங்கே நல்ல புத்தகங்கள் இருக்கு வரீங்களா?” என்றேன் ஆர்வமுடன். “அப்ப, நீ புடவை, துணிகள் பார்க்க வரவேயில்லையா?” என்றாள் அவள். நான் எனக்கு அதில் சுவாரசியம் இல்லாததால் எதுவும் விடையிறுக்காமல் சிரித்தேன். “You are not at all a Woman!” - (நீ ஒரு பெண்ணே இல்லை!) என்று அவள் கூற மற்றவர் அதை ஆமோதித்துத் தீர்ப்பளித்தார்கள்.

இது நிகழ்ந்து நாற்பத்தைந்தாண்டுகள் ஓடிவிட்டன. நம் நாட்டிலும் அரசியல் - சமூக அரங்குகள் பெரிதும்