பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்.pdf/54

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

புதியதோர் உலகு செய்வோம்

மாற்றமடைந்திருக்கின்றன. பெண்கள் முன்னேற்றம் பெரிதும் வளர்ச்சி பெற்றிருக்கின்றது. கல்வி, தொழில், கலைகள் சார்ந்து மிகப் பெரிய முன்னேற்றத்தைப் பெண்கள் எட்டி இருக்கின்றனர். அறிவு சார் உலகை அவர்கள் ஆக்கிரமிக்கிறார்கள் என்றுகூடச் சொல்லலாம். மருத்துவம், கல்விப் பயிற்சி, தகவல் தொழில்நுட்பம் ஆராய்ச்சி ஆகிய பல துறைகளில் அவர்கள் தங்கள் திறமைகளை வியக்கத்தக்க வகையில் ஆக்கபூர்வமாக வெளிப்படுத்தியுள்ளனர். காலம் காலமாக முடக்கி வைக்கப்பட்டிருந்த ஆற்றல், சமுதாய வளர்ச்சிக்குப் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. பெண்ணின் சக்தி, மரபார்ந்த தடைகளுக்குள்ளும், நூற்றாண்டுகளின் அறியாமையில் பதப்படுத்தப்பட்ட மனப்பாங்குகளில் குறுக்கப்பட்ட எல்லைகளுக்குள்ளும் சிறைப்பட்டிருந்த நிலை மாற்றப்படுகிறது. கிராமப் பஞ்சாயத்துகளில் கட்டாயமான மூன்றில் ஒரு பங்கு ஒதுக்கீடு பல பெண்களின் போராடும் ஆற்றலையும் ஆக்கப்பூர்வமான படைப்பாற்றலையும் வெளி உலகுக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறது.

எனினும், இத்துணை வளர்ச்சி - முன்னேற்றங்களும் சமுதாயத்தில் பெண்களின் நிலையை உயர்த்தியிருக்கின்றனவா? வரதட்சினைக் கொடுமை, பாலியல் வன்முறையால் நலங்கள் சூறையாடப்படும் அவலம், பெண்கருவழிப்பு, மிருகத்தனமாகக் கசக்கிப் பிழியும் கொடுமைகள் எல்லாம் அன்றாடம் சமூக அவலங்களாக விரிகின்றன. வறுமைக்கோடு, பெண்ணை மையமாக்கியே மேலே மேலே உயர்ந்து நடுத்தர வருக்கத்தையும் கோட்டுக்குக் கீழே தள்ளிக் கொண்டிருக்கிறது. பெண்ணரசு, பெண் நிர்வாகம், பெண்-காவல் பாதுகாப்புத் துறைத் தலைமை, எல்லாமே, அடித்தளப் பெண்களின்