பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்.pdf/61

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்

59

ஆனால், அறிவு வளர்ச்சி பெற்று, தொழில் நுட்பக் கல்லூரிகளில் படிக்கும் இளைஞர், யுவதிகள், காதல் என்ற ஒன்றைக் காரணமாக்கி தங்கள் விருப்பத்துக்கு மற்றவர் இணங்கவில்லை என்றால், வெட்டிச் சாய்ப்பதும், மண் எண்ணையை ஊற்றிக் கொண்டு தற்கொலை செய்து கொள்வதும், அறிவு வளர்ச்சிக்கோ, மூளைத் திறனுக்கோ எடுத்துக்காட்டாகுமா? இன்றைய சமுதாயத்தில் அன்றாடம் நிகழும் கொலைகளுக்கும் தற்கொலைக்கும் வறுமை மட்டும் காரணமா? தமது கட்சித் தலைவருக்கு ஏதேனும் ஆபத்தென்றால் தீக்குளிக்கும் தொண்டர்களை உள்ளடக்கிய அரசியல் கட்சிகள், இன்றைய குடியாட்சிச் சமுதாயத்தின் ஆரோக்கிய அடையாளங்களா? ஒரு தொண்டர் விரல்களை வெட்டிக் கொண்டு தியாகம் செய்கிறார். கோபுரத்திலிருந்து குதிப்பதாக அச்சுறுத்துவதும், வன்முறையினால் பொதுமக்களுக்குச் சேதம் விளைவிப்பதும் ஆரோக்கியமான சமுதாயத்தின் அடையாளங்களா?

யோசிக்க வேண்டி இருக்கிறது.

அரசியல் கட்சிகளின் தலைவர்களின் பலம், இத்தகைய வன்முறைத் தொண்டர்களாலும் சிறுபிள்ளைகள் போல ஒருவருக்கொருவர், அறிக்கைகளால் குத்திக் கொள்வதும், மக்கள் தொடர்பு சாதனங்கள் இந்த வகையில் ஊட்டம் பெற்று, வாழ்வாதாரங்கள் சுரண்டப்பட்ட நிலையில் அன்றாடம் போராடும் மக்களைக் குழப்புவதும் ஒரு நாகரிக வளர்ச்சி பெற்ற குடியாட்சி சமுதாயத்துக்குரிய அடையாளங்களா? புரியவில்லை.

நாம் அரசியல் விடுதலை பெற்று ஒரு பொன் விழாக் காலமும், மேலும் ஏழாண்டுகளும் ஓடிவிட்டன. விடுதலைப் போராட்டம், காந்தியடிகளின் வருகைக்குமுன், வளர்ச்சி