பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்.pdf/74

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

புதியதோர் உலகு செய்வோம்

இருக்கின்றனர். சட்ட நுணுக்கங்களில் பழம் தின்று கொட்டை போட்ட மகளிரும் இருக்கின்றனர். விபசாரம் செய்பவர் யார் என்று எவரும் ஏன் கேட்கவில்லை? பெண்ணுடலையும், அது தொடர்பான விரசங்களையும் பாடல்கள், ஆடல்கள் என்று குஞ்சு குளுவான் முதல், கிழவர், கிழவிகள் வரை ரசிக்கும்படி முதல் வாணிபம் செய்பவர்கள் பெருமைக்குரியவர்களா? இந்த வாணிபம் கலை விளம்பரப் போர்வையில் நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும் அளவுக்குக் கனம் பெற்றிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதுவும் மெய்யோ?

இத்துடன் பெண்களுக்கு ஆட்சி உரிமையில் ஒதுக்கீடு, முப்பது, முப்பத்து மூன்று என்ற இலக்கங்களும், ஒதுக்கீட்டுக்குள் ஒதுக்கீடுகள் என்ற மையிடும் உபசாரங்களும் அரங்கேறுகின்றன. எல்லா அரசியல் கட்சிகளும், பெண்களைப் பொருளாதாரம் சார்ந்து, சக்தி பெற்றவர்களாக்குவோம் என்று முழங்குகின்றன. தங்கள் தங்கள் கட்சிகளில் பெண்களின் இலட்சிய அப்பத்தைத் துண்டாடி ஆதாயம் தேடிக் கொள்கின்றன.

ஒதுக்கப்பட்ட கிராமப் பெண்கள் சைக்கிள்களில் பள்ளிகளுக்குச் செல்கின்றனர். கறுப்புப் பூனைகளாகச் சாகசம் செய்கின்றனர். சுயஉதவிக் குழுக்கள், மகளிர் பஞ்சாயத்துப் பொறுப்புகள், எழுதப் படிக்கத் தெரியாத மகளிரையும் நேர் அநுபவக் குளங்களில் தள்ளி விட்டிருக்கின்றன. முங்கி முழுகித் திணறி நீச்சல் போட்டுக் கரையேற அநுபவங்கள் பெறுகிறார்கள். உயிர்களைப் பணயம் வைக்கும் போராட்டங்களும் நடக்கின்றன. ஒரு ‘சின்னப் பிள்ளை’யின் கால்களைத் தொட்டுப் பாரதப் பிரதமர் வணங்கிக் கவுரவிக்கிறார்.