பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்.pdf/80

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
8. பெண்களின் பலவீனம் எது?


தாவர இனங்கள் பருவங்களில் பூத்துக் காய்த்துக் கனிகின்றன. கனி என்ற இலக்கின்றியே ரோஜா, மல்லிகை, முல்லை போன்ற மலர்கள் தம் பிறவிப் பயனை வண்ண வாசனைகளுடன் முடித்துக் கொள்கின்றன. பறவை இனங்கள் பார்க்கவும், கேட்கவும் மகிழ்ச்சியையும் பரவசத்தையும் அளிக்கின்றன. விலங்குகளிடமும்கூட, ஒளிவு மறைவோ கபடமோ இல்லை. ஏனெனில் ஐந்தறிவுடன் நிற்கும் உயிரினங்கள் இயல்பூக்க நெறிப்படி வளர்ச்சி பெற்று இனப்பெருக்கம் செய்து மடிகின்றன. இந்த இயற்கை உயிர் வளையத்தில் மனிதர் சுயநல - பேராசை அறிவுகள் புகுந்துவிட்டன. வாழும் காலத்திலேயே ஒரு நரகத்தைப் படைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், பல்லி பூச்சியைப் பிடிக்க வருகிறது. பூச்சி அங்கேயே நிற்கும். அதுவே சுவர்க்கமென்று கருதுமோ?

எல்லோருக்கும் பொதுவானதாக இயக்கை, நீர், மண், காற்று என்று கொடைகளை வழங்கி இருக்கிறது. ஆனால் இந்த வாழ்வாதாரங்கள் குறிப்பிட்ட மேல் வர்க்கத்தினர் தங்குதடையின்றி அனுபவிப்பதற்காக எஞ்சியுள்ள அடித்தட்டு வர்க்கம் செயல்படுகிறது. இந்தப் போராட்டத்தில் அடிபட்டுப் போகிறவள் பெண்தான். மார்ச் 8, மகளிர் தினம் என்று சொல்கிறார்கள். சுமார் பதினைந்தாண்டுகளுக்கு முன் ஒரு மாநாட்டில் உரையாற்ற சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்தேன். மாநாடு, முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் நடந்தது. என் வசதிக்காக ஒரு பெரிய ஒட்டல் அறையை ஏற்பாடு செய்திருந்தார்கள். நான் அதை மறுத்து, மாநாட்டுக்குக் குழந்தை குட்டிகளுடன் அண்டை அயல் ஊர்களிலிருந்து